லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: போலீஸ் பாதுகாப்புடன் ரேஷன்அரிசி கொண்டு செல்லப்பட்டது


லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: போலீஸ் பாதுகாப்புடன் ரேஷன்அரிசி கொண்டு செல்லப்பட்டது
x
தினத்தந்தி 25 July 2018 10:45 PM GMT (Updated: 25 July 2018 10:11 PM GMT)

லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால், நாமக்கல்லில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் ரேஷன் அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டன.

நாமக்கல்,

ஒடிசா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் கடந்த 23-ந் தேதி நாமக்கல்லுக்கு வந்தடைந்தது. அங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை அனுப்பி வைக்க ரெயில்வே கூட்ஸ்ஷெட் சங்கத்தினர் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக ரெயில்வே கூட்ஸ்ஷெட்டிற்கு 120 லாரிகள் கொண்டு வரப்பட்டது. அவற்றில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு திரண்டு வந்த நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற்று வருவதால், லாரிகளில் ரேஷன்அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றவும், அதே நேரத்தில் லாரிகள் கூட்ஸ்ஷெட்டில் இருந்து லோடுடன் வெளியே செல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் ரெயிலில் இருந்து இறக்கப்பட்டாலும், லாரிகள் பிளாட்பாரத்திலேயே நிறுத்தப்பட்டன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே ரேஷன் அரிசி பொதுமக்களின் அத்தியாவசிய தேவை என்பதால் நேற்று முன்தினம் இரவு இந்த லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இவை திருச்சி சாலையில் நுகர்பொருள் வாணிபகழக குடோனுக்கு போலீஸ் வாகனம் முன்னே செல்ல பத்திரமாக கொண்டு செல்லப்பட்டன.

இதற்கிடையே நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அருள் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவை சந்தித்தனர். அப்போது நாமக்கல் மாவட்டத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரிகள் எண்ணிக்கை குறித்த விவரம் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக சங்க நிர்வாகிகள் கூறினர். 

Next Story