காலாப்பட்டில் தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சிறைபிடிப்பு


காலாப்பட்டில் தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 26 July 2018 4:30 AM IST (Updated: 26 July 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

காலாப்பட்டில் தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

காலாப்பட்டு,

புதுவையை அடுத்த காலாப்பட்டில் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நிலத்தடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கவர்னருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கவர்னர் கிரண்பெடி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலாப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக தண்ணீர் எடுத்தால் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் காண்டிராக்டர்கள் மூலம் வானூர், கொளுவாரி, மாத்தூர், கீழ்புத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள், டிராக்டர்கள் மூலம் தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று தமிழக பகுதியில் இருந்து டேங்கர் லாரி மூலம் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. காலாப்பட்டு பிள்ளைச்சாவடி பகுதியில் வந்தபோது, பொதுமக்கள் அந்த லாரியை வழிமறித்து சிறைபிடித்தனர். எங்களுக்கே போதிய தண்ணீர் இல்லாத நிலையில், தொழிற்சாலைகளுக்கு எப்படி தண்ணீர் கொண்டு செல்லலாம் என்று கூறி, லாரி டிரைவரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த காலாப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் டேங்கர் லாரி டிரைவரிடம் விசாரித்தபோது, தண்ணீர் எடுத்துவர எந்தவித அனுமதியும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து, காராமணிக்குப்பம் நிலத்தடி நீர் ஆதார மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அனுமதியின்றி தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் எடுத்துச்சென்றது தொடர்பாக லாரி உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story