3 மாடி கட்டிட விபத்தில் இளம்பெண் பலி - குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்


3 மாடி கட்டிட விபத்தில் இளம்பெண் பலி - குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 July 2018 4:08 AM IST (Updated: 26 July 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இளம்பெண் பலியானார். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தானே,

நாட்டின் நிதிநகரமான மும்பை மற்றும் பக்கத்து நகரமான தானேயில் கடந்த சில ஆண்டு காலமாகவே மழைக்காலத்தின் போது, கட்டிட விபத்துகள் துரத்திக்கொண்டு இருக்கின்றன. குடியிருப்புகளே சமாதிகளாகும் கட்டிட விபத்துகளால் கொத்து, கொத்தாக உயிர் பலிகள் ஏற்படுகின்றன.

இந்த ஆண்டு, தற்போது மழை பெய்து வரும் நிலையில், தானே மாவட்டம் பிவண்டியில் நேற்றுமுன்தினம் இரவு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். மின்னொளி வெளிச்சத்தில் கட்டிட இடுபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி விடிய, விடிய நடந்தது. அப்போது, 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அந்த கட்டிட விபத்தில் அங்கு வசித்து வந்த கைருநிஷா சேக் (வயது25) என்ற இளம்பெண் உயிரிழந்தார். இவர் இடிபாடுகளில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தனர். இடிந்து விழுந்த கட்டிடம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளே ஆகி உள்ளது. நேற்றுமுன்தினம் மதியம் கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அதன் ஒரு சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்து வந்த 22 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேற்படி பலியான இளம்பெண் உள்ளிட்ட சிலர் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்து இருக்கின்றனர். இந்தநிலையில் தான், இரவு 8.30 மணியளவில் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. இதில் மேற்படி பலியான இளம்பெண் உள்பட 9 பேர் சிக்கிக்கொண்டு உள்ளனர்.

Next Story