தனித்தேர்வு எழுதி பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களை சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தனித்தேர்வு எழுதி பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களை சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 July 2018 4:45 AM IST (Updated: 26 July 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

தனித்தேர்வு எழுதி பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களை சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சையது ஜாகிர்உசேன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

கடந்த 1999–ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்தேன். பிளஸ்–1 படித்துக்கொண்டு இருந்தபோது எனது தாயார் புற்றுநோயால் பாதித்து இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு படிப்பை பாதியில் விட்டுவிட்டேன். கிடைத்த வேலைகளை செய்து அதன்மூலம் வந்த வருமானத்தால் குடும்பத்துக்கு உதவினேன். கல்வியின் முக்கியத்துவம் காரணமாக மீண்டும் படிக்க முடிவு செய்து, கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் தனித்தேர்வு மூலம் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதினேன். 66.58 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தேன்.

இந்தநிலையில் 5 ஆண்டுகள் சட்டப்படிப்புக்கு பிளஸ்–2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 5 ஆண்டுகள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்தேன்.

ஆனால் தனித்தேர்வு எழுதி பிளஸ்–2 தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறி, அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது இந்திய பார் கவுன்சில் விதிகளுக்கு புறம்பானது. கடந்த 23–ந்தேதி முதல் சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. அதில் என்னை பங்கேற்க அனுமதி வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல நெல்லை மாவட்டம் பேட்டையை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஜின்னா, ஆர்.வெங்கடேசன் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை முடிவில், இதே போன்ற ஒரு வழக்கில் பிளஸ்–2 தனி தேர்வர்கள் சட்டப்படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரர்களையும் சட்டப்படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story