ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. அவற்றை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் விளைவித்த தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 20-ந் தேதி முதல் லாரிகள் இயக்கப்படவில்லை.
லாரிகள் இயக்கப்படாததால் வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு வரவில்லை. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் தங்கள் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாமலும் சிரமப்படுகின்றனர்.
இதற்கிடையே வேலை நிறுத்த போராட்டம் முடியும் வரை விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வரவேண்டாம் என்று விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மணிலா, எள், சோளம், கம்பு உள்ளிட்ட தானியங்கள் மட்டும் வழக்கம்போல கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது குறுவை அறுவடை பணிகள் நடந்து வருவதால் விவசாயிகள் சரக்கு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் நெல் மூட்டைகளை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இதனால் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் கொண்டு வந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.
அந்த வகையில் நேற்றும் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆனால் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த நெல் ஈரப்பதத்துடன் இருப்பதால், அதனை உடனே கொள்முதல் செய்யாவிட்டால் வீணாகி நெல்லின் தரம் குறைந்து, விலை குறையும் நிலை ஏற்படும். அதனால் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதற்கு கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்ற விவசாயிகள் நாளைக்குள் (அதாவது இன்று) நெல்லை கொள்முதல் செய்யாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story