எட்டாக் கனியா ஆசிரியர் பணி?
கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் கல்வி (பயிற்சி) பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியுடைய பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பின்னரும் மீண்டும் ஒரு தேர்வினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு.
பேராசிரியர்கள் வழங்கிய கல்வியியல் அறிவும் பள்ளிக்கூடங்களில் பணிப்பட்டறிவு மிக்க ஆசிரியர்கள் அளித்த பயிற்சியும் தராத தகுதியை 3 மணி நேர ஆசிரியர் தகுதித் தேர்வு தந்துவிடும் என்று கருதப்பட்டது. கல்வித் துறையில் எடுத்திருக்கும் வேடிக்கையான முடிவுகளில் இதுவும் ஒன்று.
எனினும், எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா? என்னும் ஏக்கத்தில் பொருந்தாத, பொருத்தமில்லாத வினாக்களைக் கொண்ட தேர்வினைச் சகித்துக்கொண்டு கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் கல்வியில் பட்டப்படிப்பும், பட்டயப்படிப்பும் பயின்ற ஆயிரக்கணக்கானோர் தங்களை ஆசிரியர் பணிக்கு தகுதிப்படுத்தி உள்ளனர்.
இப்படியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்களின் கீழ்மட்டக் கல்வித் தகுதிகளுக்கு அர்த்தமற்ற ‘வெயிட்டேஜ்’ முறை பின்பற்றப்பட்டு அரசுப்பணி வழங்கப்பட்டது.
இளங்கலைத் தகுதிக்குரிய ஒரு பணியிடத்துக்கு முதுகலைப் பெற்றவருக்கு ‘வெயிட்டேஜ்’ கொடுப்பதுதான் முறையானது. அதை விடுத்து அவர் பெற்ற கீழ்நிலைத் தகுதிகளை வெயிட்டேஜுக்காக கருதுவது அர்த்தமற்றது; அபத்தமானது.
இந்த அபத்தத்தை உணர்ந்து 20-7-2018 நாளிட்ட அரசு அரசாணையில் இந்த ‘வெயிட்டேஜ்’ முறையினை நீக்கியுள்ளது வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும்.
அதே வேளை இன்னுமொரு இக்கட்டான நிபந்தனையை அரசுப் பணி நாடுவோருக்கு இந்த அரசாணை விதித்துள்ளது. கல்வியியலில் பட்டயம் அல்லது பட்டமானது ஆசிரியர் தகுதிக்கு உரியதுதான். இதனைக் கருத்தில் கொள்ளாமல் ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற ஒன்றில் தகுதி பெற்ற பின்னர், மேலும் அரசுப் பணி நியமனம் கிடைக்க இன்னொரு போட்டித் தேர்வாம். இது எப்படி நியாயமாகும்?
அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோர் இனசுழற்சி அடிப்படையில் காலி பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். இது வேடிக்கையானது மட்டுமல்ல. வினோதமானதும் கூட.
ஆசிரியர் தகுதித் தேர்வின் வெற்றி 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த 7 ஆண்டுகளில் அரசுப் பணி பெறாத நிலையிருப்பின் பிற பள்ளிகளில் பணியாற்றிக் கொண்டிருப்பர் அல்லது தங்கள் கல்வித் தகுதியை மேம்படுத்திக்கொண்டுதான் இருப்பர். எனவே, அவர்களின் பணி அனுபவ அடிப்படையிலும் கல்வித் தகுதி அடிப்படையிலும் அரசுப் பணி வழங்குவதே முறையானது.
இதை விடுத்து இன்னுமொரு தேர்வா...? இந்த முறையைப் பின்பற்றுவதற்கு ஆந்திர மாநிலத்தை முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. நிறுவனக் கல்விமுறை தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாடுதான் கல்விமுறைக்கு வழிகாட்டி வருகிறது. ஆசிரியர் கல்விக்கான தனி நிறுவனம் முதன்முதலாக அமைந்தது தமிழ்நாட்டில்தான்.
‘மானிட்டோரியல் சிஸ்டம்’ என்பதை கல்வியியல் துறைக்குத் தந்தது அப்போதைய சென்னை மாநிலம்தான். ஆசியாவிலேயே முதன் முதலாக ஆசிரியர் கல்வி பயிற்சிக்கென ‘நார்மல் ஸ்கூல்’ என்று ஒரு நிறுவனம் ஏற்பட்டது சென்னையில்தான். இதனுடைய வளர்ச்சி நிலையே சைதாப்பேட்டையில் இன்றுள்ள கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். அதே போல, ஆசிரியர் கல்விக்கென தனி இயக்ககம் ஏற்பட்டது தமிழ்நாட்டில்தான். ஆசிரியர் கல்விப் பல்கலைக் கழகத்தைக் கொண்டிருப்பது தமிழ்நாடுதான்.
இவ்வாறாக, முன்னேற்றச் செயல்பாடுகளை நிறைவேற்றி வரும் தமிழ்நாட்டின் கல்வித்துறை, மாற்றத்திற்கு பிற மாநிலத்தை எடுத்துக்காட்டி அரசாணைகளை விடுப்பது எந்த வகையிலும் பெருமையில்லை. ஒருவேளை இப்படி செய்வதால் நன்மை வந்து சேர்ந்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். அதுவும் இல்லை.
எனவே தனித்தன்மை வாய்ந்த தமிழ்நாட்டின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும். பணிக்கல்வியான ஆசிரியர் கல்வி பெற்றவர்களை, தகுதித் தேர்வு என்ற தடையைத் தாண்டியவர்களை மீண்டும் போட்டித் தேர்வுக்கு உட்படுத்துவது பொது நியாயத்திற்குப் புறம்பானது.
‘கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கே ஒரு கொடுமை கூத்தாடியதாம்’ என்பது போல ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன் பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு, அதன் பிறகு அரசுப் பணிக்குச் செல்ல அங்குமோர் போட்டித்தேர்வு எனும் அர்த்தமற்ற தடை.
எனவே கருணை மிக்க தமிழ்நாடு அரசின் கல்வித் துறை போட்டித்தேர்வு தொடர்பான அரசாணையை விலக்கிக்கொள்ளுவதுதான் நம் மாநிலத்திற்கும், அரசுக்கும் பெருமை. அதுதான் ஆசிரியர் கனவோடு காத்திருப்போருக்கும் நன்மை.
முனைவர் பி.ரத்தினசபாபதி, தலைவர்,
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை
Related Tags :
Next Story