துவரை பயிரை தாக்கும் பூச்சிகள் மற்றும் பருவங்கள்
துவரை செடியை சில வகை பூச்சிகள் தாக்கி விவசாயிகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கின்றன.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் துவரை பயிரிட்டுள்ளனர். நாற்றாங்காலில் இருந்து எடுத்து நடவு செய்யப்பட்ட துவரை செடியை சில வகை பூச்சிகள் தாக்கி விவசாயிகளுக்கு கடும் சேதத்தை விளைவிக்கின்றன. இந்த பூச்சிகளை சரியான முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார இழப்பை தவிர்க்கலாம்.
தாக்கும் பூச்சிகள்
நாற்றாங்காலில் இருந்து எடுத்து நடவு செய்யப்பட்ட துவரையை சில பூச்சிகள் தாக்குகின்றன. இந்த பூச்சிகளின் தாக்குதல் துவரையின் இளம் பருவம் முதல் முதிர்பருவம் வரை காணப்படுகிறது. பயிர்களை தாக்கும் பூச்சிகளின் வகைப்பட்டியலில் உள்ள 5 பெருங்குடும்பத்தைச் சார்ந்த 25 வகையான பூச்சிகள் துவரையை தாக்கி பாதிப்பு ஏற்படுத்துவதை காண முடிகிறது. இவற்றில் குறிப்பாக, சாறு உண்ணும் பூச்சிகளான தத்துப்பூச்சி, எம்போஸ்கா கெர்ரி, காய் உண்ணும் பூச்சிகளான புள்ளிகாய் புழு, மருக்கா விட்ரேட்டா, அமெரிக்கன் காய்ப்புழு, ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா, காய் ஈயான மெலனக்ரோமைசா அப்டியூசா மற்றும் இறகுப்பூச்சியான எக்செலாஸ்டிஸ் ஆடோமோசா போன்றவற்றை சொல்லலாம்.
காணப்படும் பருவங்கள்
துவரையை தாக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பருவங்களில் அதிக அளவில காணப்படுகின்றன. தத்துப்பூச்சி எம்போஸ்கா கெர்ரியானது நாற்றுப்பருவம் முதல் பூ எடுக்கும் பருவம் வரை துவரையை தொடர்ந்து தாக்குகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள பருவ காலங்களில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காய் உண்ணும் பூச்சியான ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா என்ற பூச்சியானது பூக்கும் பருவம் முதல் காய் முதிர்ச்சியடையும் பருவம் வரையிலும் காணப்படும். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலநிலை இந்த பூச்சிக்கு ஏற்றதாக இருப்பதால் அந்த காலக்கட்டத்தில் இவற்றின் பாதிப்பும் அதிகமாக இருக்கும்.
துவரை செடிகளை காய்க்கும் சமயத்தில் தாக்கக்கூடிய பூச்சிகளில் காய் ஈயான மெலனக்ரோமைசா அப்டியூசா குறிப்பிடத்தக்கது. இந்த பூச்சியின் தாக்கம் நவம்பர் 2-வது வாரம் முதல் டிசம்பர் 2-வது வாரம் வரை அதிகமாக இருக்கும். இதேபோல், எக்செலாஸ்டிஸ் ஆடோமோசா என்ற காய் உண்ணும் இறகுப்பூச்சியானது துவரையின் காய்க்கும் பருவத்தில் அனைத்து மாதங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக, இதன் தாக்கம் பிப்ரவரியில் அதிகமாகவும், அக்டோபரில் குறைவாகவும் காணப்படும்.
நன்மை செய்யும் பூச்சிகள்
துவரையை மேற்சொன்னது போல் பல்வேறு தீங்கு செய்யும் பூச்சிகள் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அதே வேளையில் இந்த பூச்சிகளை கொன்று அழித்து பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் துவரையில் காணலாம். அந்த வகையில் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டு, கீலோமினஸ் செக்ஸ்மேகுலேட்டா, பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சி, க்ரைசோபெர்லா ஜேஸ்ட்ரோவி சிலமி, சிலந்திகள் போன்ற இரைவிழுங்கிகள் மற்றும் காய்ப்புழுக்களை தாக்கக்கூடிய சில ஓட்டுண்ணிகளையும் சொல்லலாம்.
குறிப்பாக, காய்ப்புழு மருக்கா விட்ரேட்டாவின் புழு ஒட்டுண்ணி, திரோபைலஸ் மருகே அக்டோபர் மூன்றாம் வாரம் முதல் நவம்பர் இரண்டாம் வாரம் வரை அதிக அளவில் பூச்சியைக் கட்டுப்படுத்தவல்லது. காய் ஈ கூட்டுப்புழுக்களின் ஒட்டுண்ணிகளான யூரிடோமா மற்றும் யூபெல்மஸ் ஆகிய பூச்சிகளின் செயல்பாடு பிப்ரவரி முதல் மார்ச் வரை அதிகமாக இருக்கிறது.
கட்டுப்படுத்தும் முறை
பொதுவாக, மாற்றுநடவு செய்யப்பட்ட துவரையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு ஹெக்டேருக்கு 250 கிலோ என்ற அளவில் நடவு வயலில் அடி உரமாக இடலாம். மேலும், வளர் இளம் பருவத்தில் 3 சதவீதம் வேப்ப எண்ணெய் தெளித்து, 50 சதவீத பூக்கள் பூத்திருக்கும் பருவத்தில் நொவலூரான் இசி மருந்தை லிட்டருக்கு 10 சதவீதம் என்ற அளவில் தெளிக்கலாம்.
இதே போல், காய் காய்க்கும் பருவத்தில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஸ்பினோசேடு 45 எஸ்சி மருந்தை ஹெக்டேருக்கு 167 மில்லி எனற அளவில் தெளிப்பதன் மூலம் காய்ப்புழுக்களின் தொகுப்பை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க செய்யலாம்.
Related Tags :
Next Story