பாலில் இருந்து ‘பன்னீர்’ தயாரிக்கும் முறை


பாலில் இருந்து ‘பன்னீர்’ தயாரிக்கும் முறை
x
தினத்தந்தி 26 July 2018 12:03 PM IST (Updated: 26 July 2018 12:03 PM IST)
t-max-icont-min-icon

பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் தற்போது பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பாலை பன்னீராக செய்து விற்பனை செய்ய முடியும்.

கிராமங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை சுய உதவிக்குழு பெண்கள் பன்னீராக மதிப்புக்கூட்டி நகரப்பகுதிகளில் விற்பனை செய்யலாம்.

மதிப்பு கூட்டப்பட்ட பால்

பாலை நேரடியாக விற்பனை செய்வதால் சிறிதளவு லாபம் பெற முடிகிறது. ஆனால், பாலை பல்வேறு வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் பெற முடியும். பாலில் இருந்து நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பாலில் இருந்து கிடைக்கும் வெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை, உடலுக்கு அதிகம் கொழுப்பு பொருள் தேவைப்படுபவர்களுக்கான பொருத்தமான உணவுப் பொருட்களாக இருக்கின்றன. அந்த வகையில், பாலில் இருந்து தயார் செய்யப்படும் பன்னீர் மனித உடலின் புரத தேவையை ஈடு செய்யும் பொருளாக இருக்கிறது. தற்போது, நகரப்பகுதிகளில் பன்னீர் அதிக அளவில் விரும்பி வாங்கப்படுகிறது.

இது பாலை திரிய வைத்து தயாரிக்கப்படும் மிருதுவான பால் பண்டமாகும். பொதுவாக, பன்னீர் தயாரிக்க எருமை பாலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ பன்னீர் தயாரிக்க எருமைப்பால் 6 லிட்டர், சிட்ரிக் அமிலம் 12 கிராம், தண்ணீர் 1.2 லிட்டர், காடா துணி 1 மீட்டர், கடப்பா கல் 2, ஐஸ் தண்ணீர் மற்றும் கத்தி ஆகியவை தேவைப்படும்.

செய்முறை

பாலை அடுப்பில் வைத்து பொங்கும் வரை பாத்திரத்தில் அடிஒட்டாமல் கிளறிக் கொண்டே காய்ச்ச வேண்டும். பால் பொங்கிய நிலையில் அடுப்பின் சூட்டினை நிறுத்த வேண்டும். கொதிப்பு நின்று எடுத்து வைக்கப்பட்ட அந்த பாலில் 12 கிராம் சிட்ரிக் அமில பொடியை 1.2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பால் திரியும் வரை மெதுவாக ஊற்ற வேண்டும். பால் திரிந்த பின் 5 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

இந்த நிலையில் இளம்பச்சை நிறமுள்ள பால் தணிந்த நீர் மேலே நிற்கும். பன்னீர், பாத்திரத்தின் அடிப்பகுதியில் தங்கி விடும். இதை காடா துணியில் சாதம் வடிப்பது போல் வடிகட்ட வேண்டும். இப்போது பன்னீர் துணியில் தங்கி விடும். பன்னீர் உள்ள துணியை அவிழ்த்து, இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுப்பது போல் தண்ணீர் தெளித்து எடுக்க வேண்டும். பன்னீர் சுண்ணாம்பு குவியல் போன்று இருக்கும். இதை சிறு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். அதை பின்பு சிறுதுண்டுகளாக வெட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.

சத்துகள்

மனித உடலில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பன்னீரில் புரதம் 20 சதவீதம் உள்ளது. கொழுப்பு 27 சதவீதம் உள்ளது. மாவு பொருள் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதமும், நீர்ச்சத்து 50 சதவீதமும் உள்ளது. பன்னீரில் சாதாரண பாலை விட 5 மடங்கு புரதசத்தும், கொழுப்பு சத்தும் உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம். இதயநோய் உள்ளவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் இருந்து தயாரித்த பன்னீர் சாப்பிடலாம்.

பன்னீரில் கொழுப்பு சத்து கிடையாது. புரதச்சத்து மட்டுமே இருக்கும். 7 லிட்டர் பாலில் இருந்து சுமார் ஒரு கிலோ அளவிற்கு பன்னீர் தயாரிக்கலாம். எனவே, சுயஉதவிக்குழு பெண்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் இது போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பாலில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். 

Next Story