தூத்துக்குடியில் போலீசாரிடம் பொதுமக்கள் தயக்கமின்றி கருத்துக்களை தெரிவிக்க ஏற்பாடு பொதுஇடங்களில் புகார் பெட்டி வைப்பு


தூத்துக்குடியில் போலீசாரிடம் பொதுமக்கள் தயக்கமின்றி கருத்துக்களை தெரிவிக்க ஏற்பாடு பொதுஇடங்களில் புகார் பெட்டி வைப்பு
x
தினத்தந்தி 27 July 2018 3:30 AM IST (Updated: 26 July 2018 6:12 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீசாரிடம் பொதுமக்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்க முக்கியமான இடங்களில் புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் போலீசாரிடம் பொதுமக்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்க முக்கியமான இடங்களில் புகார் மற்றும் ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டன.

புகார் பெட்டி

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தவும், பொதுமக்கள் தயக்கமின்றி போலீசில் புகார் தெரிவிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் போலீஸ் சார்பில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே, உதவி கலெக்டர் அலுவலகம் அருகே, தீயணைப்பு நிலையம் அருகே, பீங்கான் ஆபீஸ் சந்திப்பு, பொருட்காட்சி திடல் ஆகிய 6 முக்கிய இடங்களில் புகார், ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.

தொடக்க நிகழ்ச்சி

இதற்கான தொடக்க நிகழ்ச்சி பனிமயமாதா ஆலய வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமை தாங்கி புகார் பெட்டி வைக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி மறைமாவட்ட பி‌ஷப் இவோன் அம்புரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், ஆகஸ்ட் மாதம் 5–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவசர தேவைக்காக ஆம்புலன்சு, மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகளும் வைக்கப்பட்டு உள்ளன. கூடுதல் துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, அந்த பகுதி முழுவதும் சுத்தமாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டி வைக்கும் திட்டம் வெற்றி பெற்றால், அனைத்து பள்ளி, கல்லூரிகளின் அருகேயும் இது போன்ற பெட்டிகளை வைக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.


Next Story