லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் மூடப்படுகின்றன ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு
லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.
கோவில்பட்டி,
லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மூடப்படுகின்றன. இதுவரை இத்தொழிற்சாலைகளில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். 3–ம் நபர் காப்பீட்டு கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் கடந்த 20–ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 7–வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.
தென் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200–க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன.
லாரிகள் வேலைநிறுத்தத்தால், தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் தீப்பெட்டி பண்டல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, தூத்துக்குடி துறைமுகத்துக்கும் லாரிகளில் கொண்டு செல்ல முடியவில்லை.
ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்புமேலும் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான மெழுகு, குச்சி, பொட்டாசியம் குளோரைடு, பாஸ்பரஸ், கந்தகம் போன்றவற்றையும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வர முடியவில்லை. இதனால் சுமார் 2 லட்சம் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்து உள்ளன. தீப்பெட்டி தொழில் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் மூலம் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்இதையடுத்து கோவில்பட்டி நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சேதுரத்தினம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் ராஜவேல், தலைவர் சுரேஷ், செயலாளர் கதிரவன், துணை தலைவர் ராஜூ, சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் அதுல் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூட முடிவுகூட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் தீப்பெட்டி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகளை மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தீப்பெட்டி தொழிலை நம்பி சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே லாரி உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.