தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை புதைத்த விவகாரம்: 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்


தனியார் தோட்டத்தில் மருத்துவ கழிவுகளை புதைத்த விவகாரம்: 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 26 July 2018 8:57 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்ட மருத்துவக்கழிவுளை அகற்றக்கோரி 2–வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருங்கல்,

கருங்கல் அருகே விழுந்தையம்பலம் குமரன்நகர் குடியிருப்பு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு லாரி, டெம்போக்கள் மூலம் தினமும் கேரளாவில் இருந்து உரங்கள் என்ற பெயரில் இறைச்சி கழிவு, மருத்துவக்கழிவுகளை கொண்டு வந்து நிலத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இதனால் நிலத்தடிநீர், ஆழ்குழாய் கிணறுகள், கால்வாய்கள் மாசுபட்டன.

மேலும், இந்த தண்ணீரை பயன்படுத்திய அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று முன்தினம் விழுந்தையம்பலம்–வில்லாரிவிளை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கீழ்குளம் பேரூராட்சி அலுவலர் மகேஸ்வரி, புதுக்கடை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடனடியாக கழிவுகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறினார்கள்.

பின்னர், இரவு தோட்டத்தில் புதைக்கப்பட்ட மருத்துவக்கழிவுகளை தோண்டி 2 டெம்போக்களில் ஏற்றி அருகில் உள்ள குளக்கரையில் கொட்டி விட்டு சென்றனர். நேற்று காலையில் இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் 2–வது நாளாக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோஜி, புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அந்த தோட்டத்தில் புதைக்கப்பட்ட இறைச்சி, மருத்துவக்கழிவுகளை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து 3 டெம்போக்களில் ஏற்றினார்கள்.

ஆனால், அந்த கழிவுகளை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதனால் டெம்போவில் ஏற்றிய கழிவுகள் தோட்டத்தில் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டது. கழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டதால் குமரன்நகர் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Next Story