நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் பேரூராட்சி, மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலா செல்பவர்கள் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக திகழ்கிறது.
ஆனால் உத்தமபாளையத்தில் சாலையின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக் கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதேபோல் உத்தமபாளையம் பேரூராட்சியின் பிரதான சாலையான மெயின் பஜார், தேரடி மற்றும் உத்தமபாளையம்-கோம்பை செல்லும் மாநில நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து உத்தமபாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக் கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
மாநில நெடுஞ்சாலை பகுதியான கோகிலாபுரம் விலக்கு பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. உத்தமபாளையம் பஸ்நிலையம், பைபாஸ் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதையொட்டி உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே உத்தமபாளையம் பஸ்நிலையம் அருகே உள்ள ஞானம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், தாசில்தார் உதயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில், ஆக்கிரமிப்பை அகற்ற ஆர்.டி.ஓ. உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் ஆர்.டி.ஓ. கூறும்போது, ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story