துண்டு, துண்டாக வெட்டி வீச்சு: குளத்தில் வீசப்பட்ட பெண் உடலின் மற்றொரு பாகம் மீட்பு


துண்டு, துண்டாக வெட்டி வீச்சு: குளத்தில் வீசப்பட்ட பெண் உடலின் மற்றொரு பாகம் மீட்பு
x
தினத்தந்தி 27 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 11:42 PM IST)
t-max-icont-min-icon

துண்டு, துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட பெண் உடலின் மற்றொரு பாகம் மீட்கப்பட்டது. இதையடுத்து காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை,


கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த குளத்தில் நிர்வாண நிலையில் பெண் சடலம் மிதந்தது. அந்த பெண் உடலின் கழுத்து, கை, கால்கள், வயிறு ஆகியவை துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதை அறிந்த போலீசார் விரைந்து சென்று, குளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர். அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதை வெளியே எடுத்து பிரித்து பார்த்த போது பெண் உடலின் தலை மற்றும் கைகள் இருந்தன. ஆனால் அந்த பெண்ணின் இடுப்புக்கு கீழ் உள்ள பாகம் கிடைக்க வில்லை.

நேற்று 2-வது நாளாக போலீசார் குளத்தில் மீனவர்களுடன் பரிசலில் சென்று தேடினர். அப்போது அந்த பெண் உடலின் மற்றொரு பாகமான இடுப்பு பகுதி மீட்கப்பட்டது. கால்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே போலீசார் தொடர்ந்து குளத்தில் தேடி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 25 வயது இருக்கும் என தெரிகிறது. அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதால் கொலை நடந்து 3 அல்லது 4 நாட்கள் இருக்கும் என போலீசார் கருதுகின்றனர். மழை காரணமாக இந்த குளத்துக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் உடல் வேறு இடத்தில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டி ஒரே குளத்தில் வீசப்பட்டு உள்ளது. எனவே அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தான் கொலை நடந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபு கொடுத்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடூரமாக கொல்லப்பட்டு இருப்பதால் காதல் அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்? என்பதை கண்டுபிடிக்க சமீபத்தில் மாயமான இளம்பெண்களின் பட்டியலை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக யாராவது நடமாடினார் களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story