வங்கிகளில் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு உடனே பணம் வழங்க வேண்டும்


வங்கிகளில் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு உடனே பணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 27 July 2018 4:15 AM IST (Updated: 27 July 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைப்பவர்களுக்கு உடனே பணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து அரியலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் பேசுகையில்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நகைகளை அடமானமாக வைத்து கடன் கேட்கின்றனர். அதிகாரிகள் நகைகளை பெற்றுக்கொண்டு 3 நாட்களுக்கு பிறகு மத்திய கூட்டுறவு வங்கிக்கு சென்று பணம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்.

தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருகிறது. விவசாய வேலை தொடங்க பணம் தேவை என்பதால் நகை கடன் வாங்கும் விவசாயிகளை பாடாய் படுத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்கும் விவசாயிகளுக்கு, அங்கேயே பணம் கொடுக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆண்டிமடம் அருகே உள்ள குப்பம்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜரத்தினம் கலெக்டர் விஜயலட்சுமியிடம் கொடுத்த மனுவில், தனது நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்து வந்தேன். ஆனால் அடிக்கடி நான் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் செல்வதால், தன்னை போலீசார் மிரட்டுகின்றனர் என்று கூறப் பட்டிருந்தது.

முன்னதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஏரி, ஆறு பாதுகாப்பு சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில், விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சரியாக நடைபெறவில்லை. புள்ளம்பாடி வாய்க்காலை தூர்வார வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டியிருந்தால், தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் வீணாக கடலில் கலக்காது என்று கோரி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1,306 டன் யூரியா, 856 டன் டி.ஏ.பி, 637 டன் பொட்டாஷ் மற்றும் 1,066 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் 129 டன் மற்றும் தனியார் கடைகளில் 30 டன் ஆக மொத்தம் 159 டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. வறட்சி மற்றும் இதர இயற்கை பேரிடரின் போது ஏற்படும் மகசூல் பாதிப்பில் இருந்து விவசாயிகளை காக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கான அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதில் நெல் குறுவை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.591 நிர்ணயிக்கப்பட்டு வருகிற 31-ந்தேதிக்்குள் பயிர் காப்பீடு செய்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இதர பயிர்களான உளுந்துக்கு ரூ.286-ம், சோளத்திற்கு ரூ.196-ம், பருத்திக்கு ரூ.1,240, கம்பிற்கு ரூ.196-ம், எள்ளுக்கு ரூ.240-ம், கடலைக்கு ரூ.498-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.405-ம் மற்றும் துவரைக்கு ரூ.286 வீதம் பிரிமியத் தொகை நிர்ணயிக்கப்பட்டு வருகிற 16-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு ஆதி திராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் பாசன கருவிகளை தங்களது வயல்களில் நிர்மாணித்துக்கொள்ள மானியம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. சிறு, குறு ஆதிதிராவிட விவசாயிகள் வருவாய்த்துறையில் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற்றிட சொந்த நிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருவதற்கான சிட்டா மற்றும் அடங்கல், வயல் வரைபடம் மற்றும் மின் இணைப்புடன் நீர் ஆதாரம் உள்ளமைக்கான சான்றுகளுடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற இதர ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கூறினார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, இணை இயக்குனர் (வேளாண்மை) உதயகுமார், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்பு ராஜன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story