கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் திருப்பம்: பெண்ணுடன் செல்போனில் ஆபாசமாக பேசியதால் தீர்த்துக்கட்டியது அம்பலம்


கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் திருப்பம்: பெண்ணுடன் செல்போனில் ஆபாசமாக பேசியதால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 27 July 2018 3:45 AM IST (Updated: 27 July 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் திருப்பமாக, கடலூர் கோர்ட்டில் நேற்று 4 உறவினர்கள் சரண் அடைந்தனர். திருச்சியில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்ணுடன் செல்போனில் ஆபாசமாக பேசியதால் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருந்து பஞ்சப்பூர் செல்லும் வழியில் பசுமைப்பூங்காவுக்கு எதிரே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்த முட்புதரில் கடந்த 24-ந் தேதி காலை வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் வயிறு, மார்பு, முகத்தில் இடது பகுதி, கழுத்து உள்ளிட்ட 6 இடங்களில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்தன. இது குறித்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் அந்த வாலிபரை கடத்தி சென்று கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி இருக்கலாமா? என்றும், நண்பர்கள் சிலர் அவரை மது அருந்த அழைத்து சென்று, அப்போது ஏற்பட்ட பிரச்சினையால் அவரை கொலை செய்திருக்கலாமா? என்றும், பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சினையால் வெட்டி கொன்றிருக்கலாமா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்யப்பட்டவர் குறித்து எவ்வித தகவலும் தெரியாததால், அவரை அடையாளம் காணும் வகையில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கொலையானவர் முகத்தை செல்போனில் பதிவு செய்து, அவர் மாயமானதாக போலீஸ் நிலையங்களில் புகார் ஆகி உள்ளதா? என விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் உதயச்சந்திரன், விஜயபாஸ்கர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில் கொலையான வாலிபர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் புதுக்கிராமத்தை சேர்ந்த இருதயராஜ்-துர்க்கையம்மாள் தம்பதியின் மகன் சூரியபிரகாஷ்(வயது21) என்பது தெரியவந்தது. அவர் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பதை அறியவும் தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் சூரியபிரகாஷின் சொந்த ஊரான கோவில்பட்டிக்கு விரைந்தனர். மேலும் கொலை தொடர்பாக திருச்சியில் போலீசார் சிலரை சந்தேகத்தின் பேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சூரியபிரகாஷை அவரது உறவினர்களே வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது உறவுக்கார திருமணம் ஆன பெண்ணுடன் அவர் செல்போனில் ஆபாசமாக பேசியது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில் கொலை தொடர்பாக திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் நேற்று பெரம்பலூரை சேர்ந்த பிரகாஷ்(37), தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த ஆறுமுகம்(70) ஆகியோரை கைது செய்தார். ஆறுமுகம் சூரியபிரகாஷின் தாய்மாமன் ஆவார்.

மேலும் கொலையில் தொடர்புடைய 4 பேர் நேற்று கடலூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அன்வர்சதாப் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1.ஆனந்த்(33), பெரம்பலூர் மாவட்டம் நியூ மதனகோபாலபுரத்தை சேர்ந்த நாகூர்கனி மகன். 2.மணிகண்டன்(33), பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன். 3.ரவிக்குமார்(44), தூத்துக்குடி குமரன்நகரை சேர்ந்தவர். 4.செந்தாமரைக்கண்ணன்(56), தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர். இவர்கள் 4 பேரையும் வருகிற 31-ந் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. கோர்ட்டில் சரண் அடைந்த ஆனந்த், சூரியபிரகாஷின் உறவினர். ஆனந்தின் மனைவியுடன்தான் செல்போனில் சூரியபிரகாஷ் ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது. எனவே, ஆனந்த் மேலும் சிலர் உதவியுடன் சூரியபிரகாஷை தீர்த்து கட்டியது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். 

Next Story