சேலத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: ரவுடி உள்பட 5 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில் வாலிபர் வெட்டிக்கொலை: ரவுடி உள்பட 5 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 27 July 2018 3:45 AM IST (Updated: 27 July 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ராகுல்ராஜ் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மணக்காடு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் விஜி என்கிற விஜய் (வயது 28). இவர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு கடன் வாங்கி கொடுக்கும் வேலை செய்து வந்தார். கடந்த 24-ந்தேதி ராம்நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் உள்ள ஒரு தகர கூடாரத்தில் வைத்து மர்ம கும்பலால் விஜய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக சின்னதிருப்பதி மகேந்திரபுரியை சேர்ந்த ரமேஷ்பாபு மகன் ராகுல்ராஜ் (24) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விஜய்யை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. விஜய் மீது அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ராகுல்ராஜ், மரவனேரி சாரதிநகரை சேர்ந்த செல்வம் மகன் ஜெயபிரகாஷ் (28), குமாரசாமிபட்டி ராம் நகரை சேர்ந்த ரவுடி சீரங்கன் (39), முருகேசன் மகன் வினோத் (23), மற்றும் செல்வம் மகன் சர்மல் (23) ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். இந்த கொலை குறித்து கைதான ராகுல்ராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது தேவைக்காக கடந்த 2 மாதங்களுக்கு சீரங்கன் மூலம் விஜய் மற்றும் அவருடைய நண்பர் தீபக்கிடம் காரை அடகு வைத்து தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றேன். சில நாட்களுக்கு பின்பு என்னுடைய அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் என கூறி விஜய்யிடம் இருந்து பணத்தை கொடுக்காமல் காரை திரும்ப பெற்றேன். அதன் பின்பு கார் மற்றும் பணம் கொடுக்காமல் இருந்ததுடன், அந்த காரை வேறு ஒருவரிடம் அடமானமாக வைத்து பணம் பெற்றுக்கொண்டேன். இது தெரியவந்ததால் விஜய் என்னிடம் ஏன்? இவ்வாறு செய்தாய் என கேட்டார். இதற்கு நான் அவரிடம் எப்படியாவது பணத்தை தந்துவிடுகிறேன் என்றேன்.

இதனிடையே தீபக், சீரங்கன் மூலம் என்னிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டார். இது தெரியவரவே எனக்கு மட்டும் ஏன்? பணம் கொடுக்கவில்லை என கூறி விஜய் தகராறு செய்தார். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரூ.30 ஆயிரம் அவருக்கு திருப்பி கொடுத்தேன். மீதியுள்ள பணத்தை திருப்பி தந்துவிடுவதாக விஜய்யிடம் தெரிவித்தேன். ஆனால் பணம் கொடுக்காததால் விஜய் என்னுடைய வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

அங்கு நான் இல்லாததால், என்னுடைய தாயிடம் உங்கள் மகன் பணம் கொடுக்கவில்லை என்றால் நடப்பதே வேறு எனவும், இன்னும் சில நாட்களில் என்னுடைய படத்திற்கு மாலை போட வேண்டியிருக்கும் எனவும் கூறியுள்ளார். இதோடு மட்டுமல்லாமல் நான் உயிருக்கு மேலாக நேசிக்கும் எனது தாயை தகாத வார்த்தையால் திட்டி விட்டு சென்றுவிட்டார். இது குறித்து என் தாய் என்னிடம் கூறிய போது விஜய் திட்டியது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக விஜய்யை கொலை செய்ய சீரங்கன் மூலம் திட்டம் திட்டினேன். இதற்காக நாங்கள் மதுகுடித்து விட்டு கேரம் விளையாடும் இடமான சீரங்கன் வீட்டிற்கு எதிரே மாநகராட்சி பள்ளி பின்புறம் உள்ள இடத்தை தேர்வு செய்தேன். இதைத்தொடர்ந்து விஜய்யிடம் பணம் கொடுப்பதாக கூறி நாங்கள் திட்டம் தீட்டிய இடத்திற்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதானவர்களிடம் இருந்து 2 வீச்சரிவாள்கள், 2 சூரிகத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சீரங்கன், ராகுல்ராஜ் ஆகியோர் கவுதம் என்ற வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story