சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2018 4:15 AM IST (Updated: 27 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சேவியர், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் சரபோஜி, சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நாகை நகராட்சி பகுதிகளில் சாக்கடை தூர்வாராமல் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பின்புறம் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

நகராட்சிக்குட்பட்ட அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. தாமரைக்குளம் நடைபாதையின் சுவர் நான்கு புறமும் இடிந்து விழுந்துவிட்டது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை புதிய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. தமிழக அரசு திடீரென சொத்துவரியை உயர்த்தியுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காத நகராட்சிக்கு சொத்துவரி உயர்வு என்பது எதற்கு? ஆதலால் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கோபிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் காதர்அலி, நகரகுழு உறுப்பினர் சுந்தரம், கிளை துணை செயலாளர் தமிழ்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் இலரா நன்றி கூறினார்.

அதேபோல வாய்மேட்டை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, பேரூர் துணை செயலாளர் அர்பத், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீராசாமி, சேட்டு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story