போளூர் அருகே சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானை


போளூர் அருகே சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானை
x
தினத்தந்தி 26 July 2018 11:17 PM GMT (Updated: 26 July 2018 11:17 PM GMT)

போளூர் அருகே சாலையில் சுற்றி திரிந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.


போளூர்,

பெங்களூரு- சென்னை 4 வழிச்சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் ஒடுகத்தூர் காட்டு பகுதியை விட்டு ஆம்பூர், பச்சகுப்பம் ரெயில்வே கேட் அருகில் சாலையை கடக்க முடியாமல் 12 யானைகள் ஜவ்வாதுமலையிலேயே முகாமிட்டன. மேலும் உணவு மற்றும் தண்ணீருக்காக மலை கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

அப்போது யானையை விரட்ட முயன்ற பலர் பலியானார்கள். அதேசமயம் பிரசவம் மற்றும் மின்வேலியில் சிக்கி 6 யானைகள் பலியாகி விட்டன. மீதி உள்ள 6 யானைகளை பிடித்து முதுமலை காட்டில் விட திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன. அப்போது ஒரு ஆண் யானை மட்டும் கூட்டத்தை விட்டு பிரிந்து தனியாக சென்றது.

கடந்த 6 ஆண்டுகளாக தன்னந்தனியாக தனது இனமே இல்லாத நிலையில் கண்ணீருடன் அந்த யானை சுற்றிக்கொண்டு வருகிறது. யாரையும் துன்புறுத்தாமல் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் காட்டில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு அமைதியாக சுற்றிக் கொண்டு இருக்கிறது. இந்த யானைக்கு ஒரு கொம்பு (தந்தம்) மட்டுமே உள்ளது. நேற்று முன்தினம் காலை போளூரை அடுத்த பட்டரைக்காடு அருகே ஜமுனாமரத்தூர் சாலையில் அந்த யானை சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து வனச்சரக அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், இந்த காட்டுயானை ஜவ்வாதுமலையில் கடந்த 2012-ம் ஆண்டு 6 காட்டு யானைகளுடன் சுற்றி திரிந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த யானை மட்டும் ஜவ்வாதுமலை, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் சுற்றி திரிகிறது. இந்த யானையால் எந்தவித சேதமும் ஏற்பட்டதில்லை. இந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story