மனுநீதி நாள் முகாமில் 405 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதி நாள் முகாமில் 405 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 July 2018 4:48 AM IST (Updated: 27 July 2018 4:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே வெள்ளக்கரை ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 405 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.

கடலூர், 


கடலூர் அடுத்த வெள்ளக்கரை ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தண்டபாணி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, சப்-கலெக்டர் சரயூ, நீதிபதி சுந்தரம் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளும் அரசு பஸ்சில் சென்றனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். முகாமில் 715 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இதில் 405 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 269 மனுக்கள் பரிசீலனையிலும், 41 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

முகாமில் வருவாய்த்துறை சார்பில் 365 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பீட்டிலும், உணவுபொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.27 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 59 ஆயிரத்து 613 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.55 ஆயிரத்து 198 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 5 ஊராட்சிகளுக்கு குடிநீர் பரிசோதனை உபகரணம் உள்பட மொத்தம் 405 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 23 ஆயிரத்து 587 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தண்டபாணி வழங்கினார்.


முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், வேளாண்மைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டனர். முன்னதாக கடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவா வரவேற்று பேசினார்.

இதில் கடலூர் சப்-கலெக்டர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் கடலூர் தாசில்தார் ஜெயக்குமார் நன்றி கூறினார். 

Next Story