பெண்களை மதிப்போருக்கு விருது வழங்க நடவடிக்கை
பெண்களை மதிப்போருக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் தண்டபாணி முன்னிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பள்ளி மாணவ-மாணவிகள், போலீசார், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு பெண்கள் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கி பேசினார்.
பயிற்சியில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது முதிர்வடைந்த 9 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 43 மதிப்பிலான காசோலைகளை மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் வழங்கினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரராகவன், துணை இயக்குனர்(சுகாதாரம்) டாக்டர் கீதா, பெண்கள் பாதுகாப்பு உறுப்பினர்கள் டாக்டர் உமாமகேஸ்வரி, டாக்டர் கிலியட்செல்வி, விஜயலட்சுமி ராமமூர்த்தி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், அதேபோல் கல்லூரி, அரசு, தனியார் அலுவலகங்களிலும் பெண்களை மதிப்போரை கண்டறிந்து அவர்களுக்கு பாலினம் சாம்பியன் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே தேர்வு செய்து வழங்க வேண்டும்.
வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் 525 மனுக்கள் பெறப்பட்டு, 430 மனுக்கள் மீது வரதட்ணை தடுப்பு குழு மூலம் சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் 31 மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் உதவி எண் 1091-ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 719 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் 528 மனுக்கள் மீது தீர்வு எட்டப்பட்டுள்ளது. 183 மனுக்கள் மீது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் பாதுகாப்பு ஆணை, குடியிருப்பு ஆணை, இழப்பீடு ஆணை, பாதுகாவல் ஆணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் பராமரிப்பு நலச்சட்டத்தில் கோட்டாட்சியரின் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவி எண்1253.
பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் மொத்தம் 22 புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமண தடை சட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக செயல்படுகிறார். இது வரை 311 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை உதவி எண்1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் கூறினார்.
Related Tags :
Next Story