திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்


திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 27 July 2018 5:15 AM IST (Updated: 27 July 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ரூ.6 கோடி மதிப்பில் புதிதாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி வழங்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.16 லட்சம் செலவில் சிறுநீரக நோய் தடுப்பு (டயாலிசிஸ்) பிரிவு தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் கே.குழந்தைசாமி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் கேப்டன் சோமசுந்தரம், அசோக், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில், துணை இயக்குனர்கள் மீரா, கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நந்தினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு டயாலிசிஸ் பிரிவை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.4 கோடியே 66 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள அடுக்குமாடி கூடுதல் மருத்துவ கட்டிடத்திற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 15 நோயாளிகளுக்கு கண்ணாடிகள், காது கேளாத 5 நபர்களுக்கு காதொலி கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இப்போது தொடங்கப்பட்டுள்ள டயாலிசிஸ் பிரிவில் கூடுதலாக 2 எந்திரங்கள் விரைவில் வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் புதிதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கப்படவுள்ளது.

கலசபாக்கம் தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் மருத்துவ கட்டிடங்கள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக உள்ள போளூர் தொகுதியில்கூட மக்கள் பயன்பாட்டுக்காக சந்தவாசல், புலியூர் பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இன்று (நேற்று) திறக்கப்பட்டுள்ளது.

செவிலியர்கள், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், சித்த மருத்துவர்கள் என மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் அவர்களின் கோரிக்கைகள் ஏற்று தற்போது புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு செவிலியர்களின் புன்னகைதான் அருமருந்து. மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளை கனிவாக கவனியுங்கள்.

இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுவது 70 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டும் தான். மற்ற மாநிலங்களில் பிரசவத்தின்போது இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அப்படியில்லை.

அரசின் சார்பில் கருவுற்ற தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.18 ஆயிரமும் வழங்கி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு 16 பரிசுப் பொருட்களுடன் அம்மா குழந்தைகள் நல பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிறது. சுகாதாரத் துறையில் தமிழகம்தான் சிறந்த மாநிலம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் டாக்டர்கள், செவிலியர்கள், சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள் என துறைவாரியாக சிறந்தவர்களை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி பாராட்டப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட துணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் கோவிந்தராசன், சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பாசறை நிர்வாகி பி.ஜி.பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழன் நன்றி கூறினார்.

Next Story