மராத்தா இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு பா.ஜனதா பொறுப்பேற்காதது ஏன்?


மராத்தா இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு பா.ஜனதா பொறுப்பேற்காதது ஏன்?
x
தினத்தந்தி 27 July 2018 5:30 AM IST (Updated: 27 July 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு பா.ஜனதா பொறுப்பேற்காதது ஏன்? என சிவசேனா கேள்விஎழுப்பி உள்ளது.

மும்பை,

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சம்னாவில் கூறியிருப்பதாவது:-

ஒரு வழியாக முதல்-மந்திரி, மராத்தா சமுதாயத்தினரிடம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அடுத்து நடக்கவேண்டிய நடைமுறைகள் ஏதும் நடந்ததாக தெரிய வில்லை. எப்படியிருந்தாலும் பிரச்சினைகள் மீது அடக்குமுறையை கையாளும் அரசின் மனநிலைக்கு இந்த வன்முறையின் மூலம் நல்ல விலை கிடைத்திருக்கிறது.

போலீசாரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 24 மணி நேரமாக அரசு உதவியற்ற நிலையில் தவித்து வருகிறது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பொதுவாக அனைத்து பிரச்சினைகளையும் தானே முன்னின்று சரி செய்யவேண்டும் என்று நினைப்பவர். ஆனால் இந்த பிரச்சினையின் போது அவர் எங்கு போனார். என்ன செய்துகொண்டிருந்தார் என்பது தெரியவில்லை.

போராட்டம் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைக்கப்பட்டபோது அவர் எங்கே சென்றார். ஏன் இந்த அரசு ஓடி ஒளிந்துகொண்டது? ஒரு சமுதாயத்தினை சேர்ந்தவர்களின் வேலைகள் தொடர்ந்து பறிபோகும்போதும், இடஒதுக்கீட்டில் அவர்கள் மறுக்கப்படும் போதும் இதுபோன்ற போராட்டம் நடப்பது இயற்கைதான்.

பொதுவாக ஏதாவது நல்லது நடந்தால் பா.ஜனதா தானாக முன்வந்து அதற்கான காரணம் நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ளும். ஆனால் இந்த வன்முறைக்கு மட்டும் ஏன் பொறுப்பேற்றுக்கொள்ள மறுக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story