கோர்ட்டு உத்தரவு அவமதிப்பு: விருதுநகர் பெண் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோர்ட்டு உத்தரவை அவமதித்த விருதுநகர் பெண் போலீசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும், அவர் மீது போலீஸ் சூப்பிரண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர், செல்வம். இவருடைய கணவர் செல்வராஜ். இவர்களுக்கு மோனிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக விருதுநகர் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு நிலுவையில் இருந்தபோது, தன் மகளை வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என்று செல்வராஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை மோனிகாஸ்ரீயை அவருடைய தந்தையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று செல்வத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து செல்வம் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார். பின்னர், “கடந்த 21-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்துக்கு (எம்.எம்.பி.ஏ.) தனது மகளுடன் மனுதாரர், எதிர்மனுதாரர் ஆகியோர் வரவேண்டும். அங்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மோனிகாஸ்ரீயை அவருடைய தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையில் மனுதாரர் தலையிடக் கூடாது. இதை சங்க நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்பேரில் அன்றையதினம் செல்வராஜும் அவருடைய வக்கீல்களும் ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்துக்கு உரிய நேரத்துக்கு வந்தனர். ஆனால் செல்வம், மகளை அழைத்துக்கொண்டு வரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அழைப்பை ஏற்கவில்லை. அன்று மதியம் 2 மணி வரை அவருக்காக மற்றவர்கள் காத்திருந்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
“மனுதாரர் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். அவர் ஒரு அரசு ஊழியராக இருந்தும், கோர்ட்டு உத்தரவை பின்பற்றாமல் அவமதித்து உள்ளார். எனவே அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை வழக்கின் நகல் கிடைத்த 2 வாரத்தில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். அவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான தகவலை வீடியோ காணொலி காட்சி மூலம் அடுத்த மாதம் 7-ந்தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.”
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story