வைக்கோல் படப்புகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்
உசிலம்பட்டி அருகே மர்ம நபர்கள் வைக்கோல் படப்புகளுக்கு தொடர்ந்து தீ வைத்து வருவதால் கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள கொப்பிலிபட்டி, சுளிஒச்சான்பட்டி, திம்மநத்தம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கிராம மக்கள் பால் மாடுகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். தற்போது போதிய மழை இல்லாததால் மாடுகளுக்கு பசுந் தீவனம் கிடைப்பதில்லை. இதனால் உலர் தீவனமான வைக்கோல், கடலை செடி, குதிரைவாலி தட்டை போன்றவைகளை படப்பாக அமைத்து சேமித்து வைத்து அவைகளை பால் மாடுகளுக்கு தீவனமாக கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இந்த வைக்கோல் படப்புகளுக்கு தீ வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவனங்கள் தீயில் கருகி வருகிறது. இதுவரை இந்தப் பகுதியில் சுமார் 16 வைக்கோல் படப்புகள் தீக்கு இரையாகி உள்ளன.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “யாரோ விஷமிகள் செய்யும் தீய செயலினால் எங்களது கால்நடைகளை காப்பாற்ற வழி தெரியாமல் உள்ளோம். தற்போது உலர் தீவனம் எங்கும் கிடைப்பதில்லை. இது குறித்து நாங்கள் போலீசில் புகாரும் கொடுத்துள்ளோம். உடனடியாக இது போன்ற விஷமிகளை கைது செய்யாவிட்டால் மீதமுள்ள மாட்டுத் தீவனத்தை காப்பாற்றுவதும் கடினம். மேலும் மாடுகளுக்காக வைத்துள்ள தீவனத்தை காப்பாற்ற இரவு நேரங்களில் வைக்கோல் படப்பிற்கு அருகிலேயே காவலுக்காக கிடக்கும் நிலை உள்ளது. இதனால் நாங்கள் வேதனை அடைந்து வருகிறோம். எனவே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வைக்கோல் படப்புகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும்” கூறினர்.
Related Tags :
Next Story