பெங்களூருவில் விதானசவுதாவுக்குள் தனியார் வாகனங்கள் செல்ல தடை


பெங்களூருவில் விதானசவுதாவுக்குள் தனியார் வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 27 July 2018 6:04 AM IST (Updated: 27 July 2018 6:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விதானசவுதா கட்டிடம் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், பார்வையாளர்கள் உள்ளே வருவதற்கு தடை விதித்து முதல்-மந்திரி குமாரசாமி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

விதானசவுதாவுக்குள் செல்ல உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே  அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல, பத்திரிகையாளர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், விதானசவுதா வழியாக தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கும் நேற்று திடீரென்று போலீசார் தடை விதித்தார்கள்.

வாகனங்களுக்கான பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே விதானசவுதா வழியாக சென்றுவர அனுமதிக்கப்பட்டார்கள். அதுபோல, வக்கீல்களும் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பத்திரிகையாளர்கள், பிற தனியார் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், விதானசவுதா, விகாச சவுதா, எம்.எஸ்.பில்டிங், கர்நாடக ஐகோர்ட்டு உள்பட முக்கிய அரசு கட்டிடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, அங்கு சிறப்பு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர்ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், அதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story