4 வயது எழுத்தாளர்!


4 வயது எழுத்தாளர்!
x
தினத்தந்தி 27 July 2018 12:34 PM IST (Updated: 27 July 2018 12:34 PM IST)
t-max-icont-min-icon

எழுத்துகளை எழுதிப் படிக்கும் வயதில் புத்தகம் எழுதி அசத்தியிருக்கிறான் 4 வயதான சிறுவன் அயன் கோகோய் கோகாய்ன்.

அசாம் மாநிலம் நார்த் லக்கிம்பர் மாவட்டத்தில் வசிக்கிறார் இந்த குட்டி எழுத்தாளர். அங்குள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் படிக்கிறார். ஹனிகோம்ப் (தேன்கூடு) என்ற சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் 30 குட்டித் துணுக்கு கதைகள் உள்ளன.

அவனுக்குப் பிடித்த வார்த்தைகள், வண்ணங்கள், ஒலிகள், சுவைகள், பார்த்தவைகளில் பிடித்தவை பற்றிய அவனது வார்த்தைகளே துணுக்கு செய்திகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவன் வரைந்த ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த சிறுவன் தாத்தா பாட்டியுடன் வசிக்கிறான். அவனது பெற்றோர் மிசோரம் மாநிலத்தில் வசிக்கிறார்கள். “நான் சுற்றிலும் பார்த்ததையே பேசுகிறேன். எழுதுகிறேன். தாத்தா பாட்டியுடன் பேசியதையும், கற்றதையும் எழுதியிருக்கிறேன்” என்கிறான் மழலை மொழி மாறாமல்.

“என் தாத்தா புர்னோ கன்ட கோகாய்தான் நான் நினைப்பதை எழுத ஊக்குவித்தார். அவர் என் ஹீரோ. அவரே என் சிறந்த நண்பன், பழக இனிமையான சாக்லெட் மேன் ” என்று தாத்தாவை புகழ்கிறான் சிறுவன்.

4 வயது என்பது, எழுத்துகளை எழுதப் படிக்கும் வயதுதானே? வார்த்தைகள் வாசிப்பதே கடினமே, எப்படி புத்தகம் எழுத முடியும்? என்ற யோசனை உங்களுக்கு எழுகிறதா? நிஜத்தில் அந்த சிறுவன் கைகளால் கட்டுரை எழுதவில்லை. நவீன தொழில்நுட்பம் வழியே புத்தகம் உருவாக்கியிருக்கிறான்.

சிறுவனின் தாத்தா ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. பெற்றோரும் உயர் பதவிகளில் இருப்பவர்கள்தான். 3 வயது வரை சரிவர பேச்சு வராத சிறுவன் கோகோய்க்கு பேசிப் பழகுவதற்காக ஒரு சிறப்பு அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்து கொடுத்தார்கள் அவனது பெற்றோர். அதில் உச்சரிக்கவும், பேசுவதை பதிவு செய்யவும், பதிவு செய்ததை வார்த்தைகளாக எழுத்துகளாக மாற்றவும் முடியும்.

கோகோய், தாத்தாவுடன் செல்லும்போது வானவில்லைப் பார்த்தால், அது பற்றி விளக்கிச் சொல்லுவார். அவன் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லுவார். மறுமுறை அவன் அந்த அப்ளிகேசனில் வானவில் பார்த்தது, ரசித்தது, வண்ணங்களைப் பற்றி தான் அறிந்த விஷயங்களை பதிவு செய்துவிடுவான். அது சிறு செய்தித் துணுக்காக மாறிவிடும்.

இப்படியே 30 விதமான துணுக்கு செய்திகளும், அவன் வரைந்த ஓவியங்களுமாக முழுமை பெற்றுள்ளது ஹனிகோம்ப் புத்தகம். இதன் விலை 250 ரூபாய்.

4 வயதில் புத்தகம் எழுதியதற்காக இந்த சிறுவனின் பெயர், ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் பதிவாகி உள்ளது. இந்தியாவின் இளம் எழுத்தாளர் இன்னும் வளர வாழ்த்துவோம்! 

Next Story