தூத்துக்குடி கடலில் மிதந்து வந்த பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை
தூத்துக்குடி கடலில் மிதந்து வந்த பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம் அடைந்தார். இதுகுறித்து பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கடலில் மிதந்து வந்த பலூன் வெடித்து 2 மீனவர்கள் காயம் அடைந்தார். இதுகுறித்து பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசைப்படகு
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், வேம்பாரை சேர்ந்த மிக்கேல் அந்தோணி மகன் கிளிண்டன்(வயது 20) உள்பட 8 பேர் கடந்த 24–ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மதியம் 1–30 மணி அளவில் தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து சுமார் 27 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஊதா, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் சுமார் 15 பலூன்கள் காற்றில் பறந்தும், கடலில் மிதந்தும் வந்தன.
கடலில் பலூன்கள்
இந்த பலூன்கள் அனைத்தும், ஒன்றாக ஒரு சிறிய கம்பியில் கட்டப்பட்டு இருந்தன. காற்றின் போக்கில், பலூன்கள் சுபாஷ் படகை நோக்கி வந்தன. இதனால் படகில் இருந்தவர்கள் அந்த பலூன்களை கையில் எடுத்தனர். பின்னர் மீனவர்கள் அந்த பலூனில் சிலவற்றை கையால் உடைத்தனர். தொடர்ந்து சில பலூன்களை மீண்டும் கடலில் வீசி எறிந்தனர். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த பலூன் படகின் அருகே வந்து ஒதுங்கியது. இதனால் படகில் இருந்த மீனவர் கிளிண்டன் அந்த பலூன்களை எடுத்தார். அவர் படகின் என்ஜின் அறைக்குள் பலூனை கொண்டு சென்று வைத்தார்.
தீக்காயம்
பின்னர் சில மீனவர்கள் என்ஜின் அறையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். கிளின்டன் பலூன் அருகே படுத்து இருந்தார். அப்போது என்ஜின் இயங்கி கொண்டு இருந்ததால் அந்த அறை வெப்பமாக இருந்து உள்ளது. சிறிது நேரத்தில் வெப்பம் காரணமாக என்ஜின் அறையில் வைத்து இருந்த பலூன்கள் வெடித்து சிதறின. இதில் பலூனில் இருந்த கியாஸ் தீப்பற்றியது. இதனால் அருகில் படுத்து இருந்த கிளின்டன் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு துடித்தார். அதே போன்று அருகில் இருந்த மரியநெல்சன்(19) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக மற்ற மீனவர்கள் அந்த 2 பேரையும் மீட்டு படகில் கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு தருவைகுளம் கடற்கரையை வந்தடைந்தனர். பின்னர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கிளின்டன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மரிய நெல்சன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
போலீசார் தீவிர விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹைட்ரஜன் கியாஸ் நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்து தீப்பிடித்ததால் தீக்காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதே நேரத்தில் நடுக்கடலில் பலூன்கள் எப்படி வந்தன, ஏதேனும் கப்பல்களில் நடந்த கொண்டாட்டங்களின் போது கட்டபட்ட பலூன்கள் மிதந்த வந்ததா? வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story