கடலூரில் லாரி டிரைவர் மீது சரமாரி தாக்குதல் 3 பேருக்கு வலைவீச்சு
கடலூரில் லாரி டிரைவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர்,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பின்னத்தூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு(வயது 35) லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருவாரூரில் இருந்து லாரியில் ரசாயனபவுடரை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றுகொண்டிருந்தார்.
கடலூர் செம்மண்டலம் என்ற இடத்தில் வந்தபோது, காரில் வந்த 3 பேர் கும்பல் லாரியை திடீரென வழிமறித்தது. பின்ன அந்த கும்பல், நாங்கள் வேலை நிறுத்தத்தில் இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி லாரியை ஓட்டலாம் என டிரைவரை பிடித்து திட்டி, சரமாரியாக தாக்கினர். மேலும் அவரிடம் இருந்த 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு காரில் தப்பி சென்றது.
அந்த கும்பலில் உள்ளவர்கள் லாரி டிரைவர் அல்லது உரிமையாளர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ராசு கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை வழிமறித்து டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிய 3 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.