மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு  தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 27 July 2018 11:09 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக அரசு குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கான சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் முன்பு 27–ந் தேதி(நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. எனினும் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நேற்று திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டல அலுவலகங்கள் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அடையாறு மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாகை சந்திரசேகர், எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சொத்து வரியை உயர்த்தியதற்காக தமிழக அரசை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க.  எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் தேவஜவஹர், கொளத்தூர் பகுதி செயலாளர் ஐ.சி.எப்.முரளி உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தேனாம்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் வள்ளுவர்கோட்டம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள பல்லாவரம் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

தாம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சி அலுவலகங்கள் முன்பும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் கே.பி.சங்கர், தி.மு.தனியரசு, ஆதிகுருசாமி, குறிஞ்சி கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை மாநகராட்சி மணலி மண்டல அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் பகுதி செயலாளர் பரந்தாமன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஏ.வி.ஆறுமுகம், அவைத்தலைவர் எம்.டி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் தலைமையிலும், ஆவடி நகராட்சி அலுவலகம் அருகே திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையிலும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் எதிரே ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி தி.மு.க. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தண்டையார்பேட்டை பகுதி பொறுப்பாளர் ஹனிபா தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் மாதவரம் மண்டல அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் துக்காராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story