அம்பத்தூரில் சமூக விரோதிகளின் கூடாரமான அரசு கட்டிடங்கள்


அம்பத்தூரில் சமூக விரோதிகளின் கூடாரமான அரசு கட்டிடங்கள்
x
தினத்தந்தி 28 July 2018 3:30 AM IST (Updated: 27 July 2018 11:13 PM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் செயல்படாமல் உள்ள அரசு கட்டிடங்களில் சமூக விரோத செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் ஏராளமான தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இதேபோல் பல்வேறு அரசு அலுவலகங்களும் அம்பத்தூரில் உள்ளன. வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகமும் இங்கு அமைந்துள்ளது.

இந்த அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை அலுவலகம், அதிகாரிகள் குடியிருப்பு, இருப்பு அறைகள், அரசு கருவூலம், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், சமுதாய நலத்துறை கட்டிடங்கள் ஆகியவை உள்ளன. இதை ஒட்டியே சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல அலுவலகம், போலீஸ் நிலையம் மற்றும் அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.

இதில், வேளாண்மை அதிகாரி குடியிருப்பு, இருப்பு அறைகள், சமுதாய நலத்துறை கட்டிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவை பயன்படுத்தப்படாமல் வருடக்கணக்கில் பூட்டி கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடங்கள் விரிசல் விழுந்து பழுதடைந்து காணப்படுகிறது. வேளாண்மை துறை அதிகாரிகள் குடியிருப்பு உள்பட 10 கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர்.

மேலும், பராமரிக்கப்படாமல் உள்ள இந்த கட்டிடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்துவதுடன், மதுபாட்டில்களையும் உடைத்துவிட்டு செல்கின்றனர். இரவு மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் இந்த பகுதியை குடிமகன்கள் பார் போல் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடும் மர்மநபர்களால் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்றுவரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

எனவே இந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவோ அல்லது புனரமைப்பு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ள இந்த பாழடைந்த அரசு கட்டிடங்களை சீரமைப்பதுடன், சமூக விரோத செயல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story