போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்
ஏரியில் மண் அள்ளிய தொழிலாளியை தாக்கி பணம் பறித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தை மண்பாண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கவுண்டர் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), மண்பாண்ட தொழிலாளி. இவர் அரசு அனுமதி பெற்று நல்லம்பள்ளி அருகே உள்ள குடிப்பட்டி ஏரியில் மாட்டு வண்டியில் மண்பாண்ட தொழிலுக்கு நேற்று மண் அள்ளிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற அதியமான்கோட்டை போலீசார் 2 பேர் காளியப்பனிடம் மண் அள்ளுவது தொடர்பாக கேட்டுள்ளனர். அதற்கு அனுமதி பெற்று மண் அள்ளுவதாக காளியப்பன் தெரிவித்துள்ளார்.
அப்போது தொழிலாளி காளியப்பனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போலீசார் காளியப்பனை தாக்கி, அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மண்பாண்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மண்பாண்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது தொழிலாளியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் பறித்து சென்ற பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் விசாரணை நடத்தினர்.
அப்போது இதுதொடர்பாக விசாரணை நடத்தி 2 போலீசார் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மண்பாண்ட தொழிலாளர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story