காசநோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்


காசநோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 July 2018 3:45 AM IST (Updated: 28 July 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த காசநோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.500 வழங்கப்படுகிறது என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாரத பிரதமரின் நிக்ஷை போஷன் யோஜனா திட்டத்தின் கீழ், காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைத்து காசநோயாளிகளுக்கும், சிகிச்சை எடுத்து முடிக்கும் வரை அவர்களது ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, அவர்களது வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.500 வழங்கும் திட்டம் ஏப்ரல் 2018 முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 650 காசநோயாளிகள் பயன் அடைந்துள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தில் இன்னும் சேர்ந்து பயன்பெறாத காசநோயாளிகள், வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களது வங்கி கணக்கு விவரங்களையும், வங்கி கணக்கு இல்லாத காசநோயாளிகள் பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவதற்கு போதுமான விவரங்களையும் காசநோய் துறையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களிடம் வழங்கி மாவட்ட காசநோய் துறைக்கு போதிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story