சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை திடீரென உயர்த்தி, வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய தமிழக அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். நகர செயலாளர் நவாப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் பரிதா நவாப், துணை அமைப்பாளர் அமீன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கருணாநிதி தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 50-ம் ஆண்டு பொன்விழா தொடங்குவதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.
பர்கூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜ், சீனிவாசன், பேரூர் அவைத்தலைவர் சின்னப்பன், நகர இளைஞரணி அமைப்பாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
முன்னதாக பர்கூர் பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து ஏராளமானோர் அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கருணாநிதி, தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 50-ம் ஆண்டு பொன்விழா தொடங்குவதையொட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, பேரூர் செயலாளர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட பிரதிநிதிகள் இளங் கோ, அண்ணாமலை, ரங்கராஜ், சின்னப்பையன், ஹரி நாராயணன், சாஜித், பசுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ. மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில துணை செயலாளர் விஜயகுமார், ஓசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் பேசினார்கள்.
இதில், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், ஓசூர் நகர துணை செயலாளர் திம்மராஜ், நகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட பிரதிநிதி சரவணன், கட்சி பிரமுகர் ஆனந்தய்யா, முன்னாள் நகர்மன்ற தலைவர் குருசாமி, ஆப்டெக் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மஞ்சுநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story