சொத்து வரி உயர்வை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி உயர்வை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 28 July 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்,

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெறக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் கட்சியின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பெரியசாமி, மருத்துவ அணி துணை செயலாளர் வல்லபன், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் அப்துல்பாருக் நன்றி கூறினார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட தி.மு.க.வினர் சார்பில், சொத்து வரி உயர்வை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவசங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப்பெற கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் லதா, இளைஞர் அணி தலைவர் இளையராசா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் வரவேற்று பேசினார். முடிவில் அரியலூர் நகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

ஜெயங்கொண்டம் நகர தி.மு.க.வினர் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் அணி இணை செயலாளர் சுபாஷ்சந்திரசேகர் சொத்து வரி உயர்வை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.

Next Story