ஆசிரியர், பட்டறை உரிமையாளர் வீடுகளில் திருடிய 4 பேர் கைது


ஆசிரியர், பட்டறை உரிமையாளர் வீடுகளில் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2018 3:15 AM IST (Updated: 28 July 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே ஆசிரியர், பட்டறை உரிமையாளர் வீடுகளில் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராசிபுரம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அந்தப் பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

அதேபோல் ராசிபுரம் கோனேரிப்பட்டி நீலா கார்டன் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் குணசேகரன் என்பவர் வீட்டில் 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுபற்றி ராசிபுரம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.


இந்த நிலையில் இந்த 2 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பாப்பாம்பாடி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கிள்ளிவளவன் (வயது 58), பெங்களூரு எலங்கா பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ராமு (38), திருச்சி மாவட்டம் துறையூர் அம்பலக்காரன் தெருவைச் சேர்ந்த மதன்குமார் என்கிற தளபதி மதன் (22), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகிலுள்ள ஆலாம்பாளையம் கர்ணன் (38) ஆகிய 4 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட கிள்ளிவளவனிடமிருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story