ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
வானூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒரு கும்பல் வழிமறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியும் பாபுவை படுகொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சஞ்சீவி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.
விசாரணையில் சொத்துப் பிரச்சினையில் கூலிப்படை வைத்து பாபு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்களில் பச்சையப்பன், அய்யப்பன், மணிகண்டன் ஆகிய 3 பேர் கடந்த 25-ந் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைந்தனர்.
இதற்கிடையே குயிலாப்பாளையத்தை ஜெகதீஷ் (21), ராஜாமணி (24), சிவஒளி (21) ஆகியோர் பாபு கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஆரோவில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை போலீசார் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story