ரூ.1,500 லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்
மதுரையில் ரூ.1500 லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை பசுமலையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவரது செல்போனை இவரது நண்பர் பிரசன்னா திருடி அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில் ரூ.1,500–க்கு விற்றுவிட்டாராம். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் கடைக்காரரிடம் இருந்து செல்போனை சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் வாங்கினார். ஆனால் அவர் செல்போனை ஒப்படைக்க ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணிகண்டன் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுரையின்படி மணிகண்டன் ரசாயன பவுடர் தடவிய ரூ.1,500 நோட்டுகளை சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராஜிடம் கொடுத்தார். அவர் அதனை வாங்கும்போது கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் பி.பாண்டியராஜன் ஆஜரானார். முடிவில், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராஜூக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.