அரசு போக்குவரத்து கழகத்தில் முறைகேடு: அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு


அரசு போக்குவரத்து கழகத்தில் முறைகேடு: அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 28 July 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழகத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யக்கோரியும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் எஸ்.முருகேசன். சட்ட உரிமை தொழிற்சங்க பொதுச்செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

மத்திய அரசு கடந்த 8.11.2016–ல் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து 11–ந் தேதி நள்ளிரவு வரை அரசு பஸ் பயணிகளிடம், மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கருப்பு பணக்காரர்களும், பெரிய நபர்களும் தங்களிடம் இருந்த அதிக மதிப்புள்ள பணத்தை போக்குவரத்து கழகங்கள் மூலம் மாற்றினர். இதன் மூலம் பெருமளவு பணம் மோசடியாக மாற்றப்பட்டது.

குறிப்பாக திண்டுக்கல் மண்டலத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் துணையுடன் அதிக அளவு பணம் இதுபோல் மாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆண்டே மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை.

இதேபோல், திண்டுக்கல் மண்டலத்தில் ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்காமல் பணம் பெற்றுக்கொண்டு பணி ஒதுக்குவது, குறிப்பிட்ட தடத்தில் செல்லும் பஸ்களை ஒதுக்கீடு செய்ய பணம் பெறுவது என முறைகேடு நடக்கிறது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம் அதிகாரிகள் அதிக பணமும், சொத்தும் சேர்த்துள்ளனர். அதிகாரிகளின் இதுபோன்ற செயலால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்றம் தலையிட்டு அரசுப்பணியாளர் விதிப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை தாக்கல் செய்யவும், குற்றச்சாட்டிற்கு ஆளான அதிகாரிகள் ஓய்வு பெறுவதை தடுக்கவும், தலைமைச் செயலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் பணியாளர் சம்பந்தப்பட்டதாக இல்லை. பொதுநல மனு போல உள்ளது. எனவே, பொதுநல மனுக்களை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக நிர்வாக நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story