சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை முழுமையாக திரும்ப பெறக்கோரி காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் காரைக்குடி நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, நகர அவைத்தலைவர் ராகோ அரசு, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, தி.மு.க. தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி மலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று தேவகோட்டை நகராட்சி முன்பு முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேவகோட்டை நகரச் செயலாளர் பாலமுருகன், ஒன்றியச் செயலாளர்கள் பூபாலசிங்கம்(வடக்கு), ரவி(தெற்கு), கண்ணங்குடி ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், கல்லல் ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், நல்லிவயல் அழகேசன், முன்னாள் நகர செயலாளர் மதார்சேட், ஒன்றிய பொருளாளர் சின்னக்கிளியூர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு சிவகங்கை நகர, ஒன்றிய, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில் ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.