சிவகாசி அருகே ஓடையை காணவில்லை என கிராம மக்கள் புகார்


சிவகாசி அருகே ஓடையை காணவில்லை என கிராம மக்கள் புகார்
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 28 July 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நகஸ்கரித்தான் பட்டியில் ஓடையை காணவில்லை என கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட நகஸ்கரித்தான் பட்டியில் இருந்த ஓடையை காணவில்லை என அந்த கிராமத்தை சேர்ந்வர்கள் 50 பேர் நேற்று காலை தாலுகா அலுவலகத்துக்கு வந்து தாசில்தார் பரமானந்தராஜாவை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது நமஸ்கரித்தான்பட்டி மக்கள் கூறியதாவது:–

எங்கள் கிராமத்தில் இருந்த 300 அடி நீளமும், 45 அகலமும் கொண்ட ஓடையில் கடந்த காலங்களில் அதிகளவில் தண்ணீர் இருந்தது. இந்த நிலையில் போதிய மழை இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஓடையில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சிலர் அந்த ஓடையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். இதனால் தற்போது அங்கு ஓடை இருந்த அடையாளமே தெரியவில்லை. அதே போல் பெருமாள் கோவில் அருகிலும் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார்கள். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தாசில்தாரிடம் தற்போது தக்க ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.


Next Story