சத்தியமங்கலம் அருகே பஸ் வசதிக்கோரி கல்லூரி மாணவ– மாணவிகள் திடீர் சாலை மறியல்


சத்தியமங்கலம் அருகே பஸ் வசதிக்கோரி கல்லூரி மாணவ– மாணவிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 July 2018 4:00 AM IST (Updated: 28 July 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே பஸ் வசதிக்கோரி கல்லூரி மாணவ– மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர் அருகே அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இந்திரா நகர் வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்திரா நகரில் இருந்து மாணவ– மாணவிகள் நடந்தே கல்லூரிக்கு சென்றுவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் 300–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள் சத்தியமங்கலம்– அத்தாணி ரோட்டில் உள்ள ஆஸ்பத்திரி மேடு என்ற பகுதிக்கு ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்தும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மாணவ– மாணவிகள் கூறுகையில், ‘புதிய கட்டிடம் கட்டப்பட்ட பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கல்லூரியில் படித்து வருகிறோம். கல்லூரிக்கு அருகில் உள்ள இந்திரா நகர் வரை மட்டும் பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்காரணமாக அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்தே செல்கிறோம்.

எனவே கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை முறையிட்டோம். ஆனால் பஸ்கள் இயக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்,’ என்றனர். இதற்கு பதில் அளித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், ‘உங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த மாணவ– மாணவிகள் 11 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story