விபத்தில் 3 பேர் பலி எதிரொலி: சாலை வசதி கேட்டு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
ஆம்பூர் அருகே விபத்தில் 3 பேர் பலியானதை தொடர்ந்து நாயக்கனேரிமலை கிராமத்திற்கு பஸ், சாலை, மருத்துவமனை வசதி கேட்டு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியை சுற்றி 15-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆம்பூரில் இருந்து தினமும் ஒரு மினி பஸ் மட்டுமே குறிப்பிட்ட நேரங்களில் சென்று வருகிறது. இதனால் மலைப்பகுதி மக்கள் போதுமான பஸ் வசதி இல்லாமல் ஆம்பூருக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.
அவ்வாறு வரும் மக்கள் மலைக்கு செல்லும் வாகனங்களில் ‘லிப்ட்’ கேட்டு செல்கின்றனர். மேலும் மலை கிராமத்தில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் திடீரென உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களை டோலி கட்டி தூக்கி வரும் நிலைதான் இன்று வரை இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நாயக்கனேரி மலைக்கு ஹாலோபிளாக், சிமெண்டு மூட்டை ஏற்றி சென்ற டிராக்டரில் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்றுள்ளனர். அப்போது திடீரென விபத்துக்குள்ளானதில் டிராக்டரில் பயணம் செய்த பொன்னுசாமி, சிங்காரம், சின்னசாமி ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நாயக்கனேரி மலை கிராமத்திற்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து மிக குறுகிய சாலையாக உள்ளது எனவும், சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும், சரியான பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், நாயக்கனேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மலைக்கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா, நகர செயலாளர் எம்.மதியழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நாயக்கனேரிமலைக்கு கூடுதல் பஸ் வசதி, மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story