விவசாயிகளின் 5 நாள் போராட்டம் தொடங்கியது: ஒரே நாளில் ரூ.10 லட்சம் வர்த்தகம் பாதிப்பு
கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி எடக்காடு கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலையை வினியோகிக்காமல் புறக்கணிக்கும் 5 நாள் போராட்டத்தை விவசாயிகள் நேற்று தொடங்கினர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.10 லட்சம் மதிப்பில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே எடக்காட்டில் குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தினமும் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். அதற்கு மாதந்தோறும் விலை நிர்ணயம் செய்து, பணப்பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம். கடந்த ஜூன் மாதம் கிலோவுக்கு ரூ.8 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது குறைவாக உள்ளது எனவும், விலையை உயர்த்து நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு குன்னூர் இண்ட்கோ சர்வ் மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி முதற்கட்டமாக கடந்த 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் எடக்காடு தேயிலை தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வினியோகிப்பதை நிறுத்தி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது 2–ம் கட்டமாக நேற்று முதல் 31–ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வழங்குவதை புறக்கணிக்கும் போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர்.
இதனால் நேற்று எடக்காடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக கூட்டுறவு தொழிற்சாலைக்கு மட்டுமின்றி தனியார் தொழிற்சாலை மற்றும் தரகர்களுக்கு பச்சை தேயிலை வினியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் எடக்காடு பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.