புதுச்சேரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்


புதுச்சேரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்
x
தினத்தந்தி 28 July 2018 4:16 AM IST (Updated: 28 July 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே நிறுத்தத்தில் நிற்காத புதுச்சேரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொறையாறு,


காரைக்காலில் இருந்து பொறையாறு வழியாக மயிலாடுதுறைக்கு புதுச்சேரி மாநில அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும்போது காழியப்பநல்லூருக்கு செல்ல ஒரு பெண் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். பஸ் காழியப்பநல்லூரில் நிற்காது என்று கூறி 3 கி.மீட்டருக்கு முன்பாக உள்ள திருக்கடையூரில் அந்த பெண்ணை கைக்குழந்தையுடன் இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த காழியப்பநல்லூர் கிராம பொதுமக்கள் நேற்று மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கு சென்ற அந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது காழியப்பநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் அந்த பெண்ணை 3 கி.மீட்டருக்கு முன்பாக இறக்கிவிட்டது குறித்து கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜீவானந்தம் மேற்கண்ட இடத்திற்கு வந்து பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இனிமேல் காழியப்பநல்லூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்லும் என்று உறுதி அளித்தார். அதை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பஸ்சை விடுவித்தனர். இதனால் சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story