மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயற்சி: தலைமறைவான பெண் வார்டனின் பின்னணியில் இருப்பது யார்–யார்? போலீசார் விசாரணை
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயன்ற விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் பெண் வார்டனின் பின்னணியில் யார்–யார் உள்ளனர்? என்பது குறித்து அவருடைய செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை ஹோப்கல்லூரி பாலரங்கநாதபுரம் ஜீவாவீதியில் தர்ஷனா என்ற பெயரில் பெண்கள் தங்கும் விடுதியை சேரன்மாநகரை சேர்ந்த ஜெகநாதன் (வயது 48) என்பவர் நடத்தி வந்தார். இந்த விடுதியில் தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்த புனிதா (32) என்பவர் வார்டனாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் புனிதா, விடுதியில் தங்கி இருந்த 5 மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைத்து செல்ல ஆசை வார்த்தை கூறி ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கடந்த 23–ந் தேதி புனிதா, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜெகநாதன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். எனவே இந்த வழக்கில் புனிதாவை பிடித்து விசாரித்தால் மட்டுமே உண்மை நிலவரங்கள் தெரிய வரும். இதற்காக தனிப்படை போலீசார் புனிதாவை வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் அவர் தனிப்படை போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருகிறார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த புனிதாவுக்கு ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகிறது. புனிதா தனது செல்போனை அணைத்து விட்டு காதலனுடன் தப்பி சென்றதாக தெரிகிறது. அவர் சென்னை அல்லது பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புனிதா, ஆசை வார்த்தை கூறி வேறு மாணவிகள் யாரையும் தவறான பாதைக்கு அழைத்து சென்றாரா? அவருடன் யார்– யார் தொடர்பில் இருந்தனர். அவர்களின் பின்னணி என்ன? என்பதை அறிய புனிதாவின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விடுதியில் மொத்தம் 180 பெண்கள் தங்கி இருந்தனர். இதில் 150 பேர் வெளியேறி விட்டனர். இன்னும் 30 பேர் மட்டுமே விடுதியில் உள்ளனர். அவர்களும் வேறு விடுதிக்கு மாறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.