பட்டானூர் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்


பட்டானூர் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 28 July 2018 5:08 AM IST (Updated: 28 July 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

பட்டானூர் சுங்கசாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

வானூர்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20–ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் நேற்று 8–வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் ஆங்காங்கே தேக்கம் அடைந்து உள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும் அபாயம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும் நேற்று புதுவை லாரி உரிமையாளர்கள், சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமையில் பட்டானூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனை ஏற்று லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story