புதுவை மாநிலத்தில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேர் கைது


புதுவை மாநிலத்தில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 July 2018 5:09 AM IST (Updated: 28 July 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 5 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் 3 நம்பர் லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சட்டம்– ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவின் பேரில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து லாட்டரி சீட்டு விற்பனை கும்பலை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோரிமேடு போலீஸ் சரக பகுதியில் போலி லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது புதுவை சொக்கநாதன்பேட் நடுத்தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம் (வயது53) என்பவருடைய வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டில் இருந்து பல இடங்களுக்கு போலி லாட்டரி சீட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதையொட்டி அந்த வீட்டில் இருந்து போலி லாட்டரி சீட்டுகள் வடிவமைக்க பயன்படுத்திய 4 மடிக்கணினிகள், பிரிண்டர், பணம் எண்ணும் எந்திரம், ரசீது எந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஸ்ரீராமை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் போலீசில் அளித்த வாக்குமூலத்தின்படி, அவருடைய கூட்டாளிகளான லாஸ்பேட்டை சாந்தி நகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (58), ரெட்டியார்பாளையம் சுதாகர் நகர் 7 வது குறுக்குத்தெரு ரிச்சர்ட் (23), சிங்கமுகம் (19), பாக்குமுடையான்பேட் தமிழ் அன்னை நகர் 2வது குறுக்குத்தெரு வேல்முருகன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் ரொக்கம், 20 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய நபரான கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த பாபுவை போலீசார் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் பிடிபட்டால் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

லாட்டரி சீட்டு கும்பலை பிடித்ததில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு அதிரப்படை போலீஸ் அதிகாரிகள், போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா பாராட்டினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை 100, இலவச எண்ணான 1031 என்ற எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவர்களை பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.


Next Story