தடகள சாம்பியனின் அடுத்த அவதாரம்!


தடகள சாம்பியனின் அடுத்த அவதாரம்!
x
தினத்தந்தி 28 July 2018 2:46 PM IST (Updated: 28 July 2018 2:46 PM IST)
t-max-icont-min-icon

தடகளத்தில் பல உலக சாதனைகளைத் தகர்த்தெறிந்த உசைன் போல்ட், அடுத்ததாக கால்பந்து வீரராக அவதாரம் எடுக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஏ லீக் கால்பந்து தொடரில், சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் என்ற அணிக்காக உசைன் போல்ட் ஆடப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜமைக்காவைச் சேர்ந்த 31 வயதான உசைன் போல்ட், 8 முறை ஒலிம்பிக் சாம்பியனாகத் திகழ்ந்தவர், 100 மீ., 200 மீ., ஓட்டங்களில் உலக சாதனைக்குச் சொந்தக்காரர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் லண்டனில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்புடன் ஓய்வுபெற்ற உசைன் போல்ட், ஒரு கால்பந்து பிரியர். மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தீவிர ரசிகரான போல்ட்டுக்கு, கால்பந்து ஆட வேண்டும் என்ற ஆசையும் உண்டு. தடகளத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டபிறகு, அந்த ஆசையை நனவாக்கப் பார்க்கிறார்.

அதற்காக, மேலே குறிப்பிட்ட ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி யிருக்கிறார்.

சிட்னிக்கு வடக்கே 75 கி.மீ. தொலைவில் கோஸ்போர்டில் உள்ள மரைனர்ஸ் அணியின் மையத்தில் அடுத்த மாதம் சோதனை ரீதியான ஆட்டங்களில் போல்ட் ஆடவிருக்கிறார். இத் தகவலை அந்த அணியின் தலைமை செயல் அலுவலர் ஷான் மீலிகாம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நன்றாக அமைந்தால், போல்ட் ஒரு முழு சீசனுக்கு கால்பந்து ஆடுவார் என குறிப்பிட்ட அணி வட்டாரம் கூறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் கால்பந்து முகவரான டோனி ராலிஸ், ‘‘தற்போதைக்கு கொள்கை அளவில் சில விஷயங்கள் முடிவாகியிருக்கின்றன. எல்லாம் நல்ல படியாக நடந்தால், போல்ட் கால்பந்து களமிறங்குவார். ஆரம்பகட்ட சோதனை ஆட்டங்களும், ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனத்தின் ஆதரவும்தான் முக்கியமான விஷயங்கள். கால்பந்து சம்மேளனத்தின் ஆதரவு மட்டும் இருந்தால் எல்லாம் சிறப்பாக நடந்தேறும். எங்கள் ஏ லீக்குக்கு ஒரு பிரபலமான ஹீரோ கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். தற்போது ஒரு சூப்பர்மேனே கிடைத்துவிட்டார்’’ என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்.

‘‘இன்னும் சில வேலைகள் முடிய வேண்டியிருக்கிறது. அதற்குள் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது’’ என்று மரைனர்ஸ் அணியின் மீலிகாம்ப் கூறுகிறார்.

‘‘முதலில், போல்ட்டின் கால்பந்து திறமையை நாங்கள் அறிய வேண்டும். அதற்குப் பின்புதான் எல்லாம் முடிவாகும். நாங்கள் நினைப்பது போல் எல்லாம் நடந்தால், ஏ லீக்கின் இந்த சீசனிலேயே போல்ட் ஆடக்கூடும்’’ என்கிறார்.

அவரே தொடர்ந்து, ‘‘ஐரோப்பிய கால்பந்து கிளப்கள் சிலவற்றுக்கான சோதனை ஆட்டங்களில் போல்ட் ஓரளவு நன்றாகவே ஆடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கால்பந்து பயிற்சியில் ஒவ்வொரு முறையும் அவர் முன்னேற்றம் காட்டுவதைக் காண முடிகிறது’’ என்று பாராட்டிச் சொல்கிறார்.

‘‘உசைன் போல்ட்டால் இடது காலால் நன்றாக ஆட முடிகிறது. அவரது கால்பந்து ஆட்டத்தரம் எந்த அளவில் உள்ளது, ஏ லீக்கில் அவரால் ஆட முடியுமா என்பதைக் காலம்தான் சொல்லும். நாம் நினைக்கிற மாதிரி அமைந்தால், மிகச் சிறப்பாக இருக்கும்தான்!’’ என்று தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறார்.

தடகளத்தில் தனித் தடம் பதித்த உசைன் போல்ட், கால்பந்தில் கலக்குவாரா என்று நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்! 

Next Story