பனை காக்கும் பட்டதாரி


பனை காக்கும் பட்டதாரி
x
தினத்தந்தி 28 July 2018 3:24 PM IST (Updated: 28 July 2018 3:24 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் அருகே உள்ள இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்த பிரேம் ஆனந்திற்கு பனம் பழங்களை சேகரிப்பதே முக்கிய வேலை.

தன்னுடைய வயல்வெளிகளிலும், பெரம்பலூர் மாவட்ட சாலைகளிலும் விழுந்து கிடக்கும் பனம் பழங்களை பத்திரமாக சேகரிக்கும் பிரேம் ஆனந்த், அதை விதையாக்கி பக்குவமாக விதைக்கிறார். பனை மரத்தில் இருந்து விழுந்து வீணாகும் பழங்கள், இவரது முயற்சியினால் பனை மரங்களாக வளர்ந்து நிற்கின்றன.

அதிகாலையில் பனை காக்கும் பணிக்கு கிளம்பும் பிரேம், பனம் பழங்களை தேடுவது, கிடைத்த பழங்களை விதையாக்கி நெடுஞ்சாலைகளில் புதைப்பது, வளர்ந்த பனை மரங்களை பார்த்து பூரிப்பது என பனை நேசராக வலம் வருகிறார்.

அதிலும் ஜூன், ஜூலை மாதங்களில் பிரேம் படுபிசியாக சுழல்கிறார். ஏனெனில் இந்த காலக்கட்டத்தில்தான் பனம் பழங்கள் மரத்தில் இருந்து அதிகமாக விழும் என்பதால், பள்ளி மாணவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு காடு மேடுகளில் அலைந்து திரிந்து பனம் பழங்களை சேகரிக்கிறார். வயல்வெளி, நெடுஞ்சாலை யோரங்கள், ஏரி-குளம் போன்ற நீர் நிலைகளின் கரையோரங்களில் விதைகளை விதைக்கும் பிரேம், மீதமிருக்கும் விதைகளை அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கும், இயற்கை ஆர்வலர் களுக்கும் கொடுத்து மகிழ்கிறார்.

பனை காக்கும் பட்டதாரியாக சமூக பணியாற்றிவரும் பிரேமை சந்தித்தோம். அவர் பனை பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அதனால் பனை மரத்தின் மகத்துவத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு காலத்தில் பனை மரங்கள் விளைநிலங்களின் இயற்கை வேலியாக திகழ்ந்தன. அதுமட்டுமா..? நிலத்தடி நீர்மட்டத்தையும் தக்கவைத்தன. உடலை குளிர்வூட்டும் நுங்கு, பதநீர் போன்றவைகளுக்கும், இயற்கை இனிப்பான கருப்பட்டிக்கும், நார் சத்து நிறைந்த பனங்கிழங்கிற்கும் மூலப்பொருளாகின. மேலும் பனை ஓலைகள் விசிறிகளாகவும், கூடை பெட்டிகளாகவும், உணவு பரிமாறும் இலைகளாகவும், இறைச்சி பைகளாகவும், வீட்டின் கூரைகளாகவும், வேலி தட்டிகளாகவும் பயன்பட்டன. ‘இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்ற அடைமொழி யானைக்கு மட்டுமல்ல பனை மரத்துக்கும் பொருந்தும். இவ்வளவு சிறப்புகள் இருந்தும், செங்கல் சூளைகளுக்கும், விறகு கட்டைகளுக்காகவும் பனை மரங்கள் வெட்டப்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம்’’ என்பவர் ஒரு அதிர்ச்சிகரமான தகவலையும் முன்வைத்தார்.

‘‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. ஆனால் இன்று வெறும் 5 கோடிகளுக்கும் குறைவான பனை மரங்களே உள்ளன. இந்த விஷயம் என்னை வெகுவாக பாதித்தது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்ததும், அதை மேம்படுத்தும் முயற்சிகளில் இறங்கினேன்.

என்னுடைய வயல்வெளியில் இருக்கும் 200 பனை மரங்களில் காய்க்கும் நுங்குகளை பறிக்காமல் பழுக்க விட்டு, பனை விதை களாக மாற்றினேன். நுங்குகளை சில நூறுகளுக்கு விற்பதை விட, அதை பல நூறு பனை விதைகளாக மாற்றி, தமிழகமெங்கும் விதைப்பது முக்கியமான பணியாக தோன்றியது.

மேலும் தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்மட்ட குறைவிற்கும், பனை மரங்களின் அழிப்பு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில் பனை மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை குறையவிடாமல் பராமரிக்கக்கூடியவை. இதை இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வாரும் உறுதிப் படுத்தியிருக்கிறார். ஒரு கிணற்றை சுற்றி பத்து பனைமரங்கள் இருப்பின், அவை கடும் வறட்சி காலங்களிலும் தண்ணீரை வற்றவிடாது என்பது நம்மாழ்வாரின் கருத்து. இதை பனை மரங்கள் சூழ்ந்த என்னுடைய கிணற்றில் கண்கூடாக பார்த்திருக்கிறேன். கடுமையான வறட்சி காலங்களிலும் என்னுடைய கிணற்றில் நீர் வற்றியதில்லை. அப்படி இருக்கையில்... பனை மரங்களின் அழிவும், நிலத்தடி நீர்மட்டத்தின் குறைவும் என்னை சிந்திக்கவைத்ததால் தமிழகம் முழுவதும் பனை மர வளர்ப்பை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறேன். நாம் சாதாரணமாக நினைக்கும் பனை மரங் களில்தான் தமிழ்நாட்டின் நீர் ஆதாரமும், தமிழரின் அடையாளமும் இருக்கிறது’’ என்பவர், இயற்கை விவசாயத்தை கையில் எடுத்ததையும், என்ஜினீயரிங் வேலையை கைவிட்டதையும் விளக்கினார்.

‘‘நான் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் முடித்திருக்கிறேன். படிக்கும்போதே எனக்கு நல்ல சம்பளத்தில் பெங்களூருவில் வேலை கிடைத்தது. என்னதான் கை நிறைய சம்பளம் கிடைத்தாலும், குடும்ப விளைநிலத்தை வேறு ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்துவிட்டு, பெங்களூருவில் வேலைப்பார்ப்பது என்னை வெகுவாக பாதித்தது. அதனால் என்ஜினீயரிங் வேலையை விட்டுவிட்டு, முழுநேர விவசாயியாக மாறினேன். நம்மாழ்வாரின் அறிவுரைப்படி இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து, எனது வயலில் இயற்கை வழியில் கரும்பு மற்றும் மஞ்சளுடன், சிறுதானியங்களையும் ஊடு பயிர்களாக பயிரிட்டுள்ளேன். விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் விவசாயத்திற்கே போதுமானதாக உள்ளதால், குடும்ப தேவைகளை சமாளிக்க அரசு வேலையில் சேருவதற்காக போட்டி தேர்வு களுக்கு படித்து வருகிறேன். நிறைய அரசு போட்டித்தேர்வுகளை எழுதியிருக்கிறேன். அரசு வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் விவசாயத்திற்கே கூடுதலாக செலவழிப்பேன்’’ என்று ஆர்வமாக பேசும் பிரேம் ஆனந்திற்கு 1 லட்சம் பனை விதைகளை விதைக்கும் ஆசையும் இருக்கிறது. அதில் 80 சதவீத பணிகளை முடித்துவிட்டார்.

‘‘1 லட்சம் பனைவிதைகளை விதைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த பணியில் இறங்கினேன். தற்போது 80 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நிச்சயம் 20 ஆயிரம் பனைவிதைகளை விதைத்து விடுவேன். இலக்கை அடைந்தாலும் தொடர்ந்து பனைவிதைகளை விதைத்து கொண்டிருப்பேன். விதைகள் முளைத்தால் மரமாகட்டும். இல்லையென்றால் மண்ணுக்கு உரமாகட்டும்.

அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக ‘காடு வளர்ப்போம்’ திட்டத்தின் கீழ், தமிழக அரசே பனை விதைகளை விதைக்க வேண்டும். பனைமரங்கள் மூலம் கிடைக்கும் பொருட்கள், கைவினைப்பொருட்களை வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், பனைமரங்களுடன் பனையேறும் தொழிலும், பனையேறும் தொழிலாளர்களும் காப்பாற்றப்படுவார்கள்’’ என்று பொறுப்பாக பேசும் பிரேமை நடிகர் ராஜ் கிரண் உள்ளிட்டவர்களும், பல அரசியல் பிரமுகர்களும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கிலும், வாட்ஸ்-ஆப்பிலும் படுசுட்டியாக இருக்கும் பிரேம், சமூக வலைத்தளங்களிலும் தன்னுடைய கருத்துக்களை விதைத்து வருகிறார். இவரது முயற்சிக்கு தந்தை இளங்கோவன், தாய் சாந்தி மற்றும் தங்கை ஆர்த்தி பிரியா ஆகியோரும் உறுதுணையாக இருக் கிறார்கள். அதனால் பிரேமின் பனை வளர்ப்பு முயற்சிகள் தடையின்றி வளர்ந்து வருகின்றன.

‘‘நம்முடைய முன்னோர்கள் நன்றாக யோசித்துதான் பனைமரங்களை வளர்த்திருக்கிறார்கள். அதில் ஏராளமான நன்மைகள் இருந்ததால்தான் வருங்கால சந்ததியினருக் காக விட்டு சென்றிருக்கிறார்கள். நாமும் நம்முடைய எதிர்கால தலைமுறையினரின் பயன்பாட்டிற்காக பனை மரங்களை நட்டு வைக்கவேண்டும். அப்போதுதான் பனை பாரம்பரியம் தொடரும். தமிழரின் அடையாளமும் நிலைத்திருக்கும்’’ என்பவர், விதைகள் வேர் ஊன்றட்டும், பனை மரங்கள் பாதுகாக்கப்படட்டும். பனை என்பது வெறும் மரம் மட்டுமல்ல, தமிழரின் அடையாளமும் கூட..’’ என்ற அழுத்தமான கருத்துடன் விடைப்பெற்றார். 

பனை விதைகளை எப்படி கொடுக்கிறீர்கள்?

‘‘பனைவிதைகள் கேட்கும் நபர்கள் சிலர் சரக்கு வாகனத்தை எனது வயலுக்கு கொண்டு வந்து, தேவையான பனை விதைகளை ஏற்றி செல்வார்கள். வெகு தொலைவில் இருப்பவர்கள் பனை விதைகளை கேட்டால், கூரியர் மூலமாகவும், சிறப்பு ஏற்பாடு களின் மூலமாகவும் அனுப்பி வைக்கிறோம். அதற்கு ஆகும் செலவினை அவர்களே தந்து விடுவார்கள்’’ 

பனை விதைகளை எப்படி விதைக்கவேண்டும்?

‘‘பனை விதைகளை விதைக்க ரொம்ப சிரமபட தேவையில்லை. கைகளினால் 4 செ.மீ. ஆழம் தோண்டி விதைகளை போட்டு மண்ணை கொண்டு மூடி விட்டாலே போதும். அதனை தண்ணீர் உற்றி, உரம் போட்டு வளர்க்க தேவையில்லை. மழை பெய்யும் போது அதுவே மழைநீரை சேகரித்து கொள்ளும். பனை விதையை ஆடு, மாடு சாப்பிடாது. இதனால் அதற்கு பாதுகாப்பு வேலி போட வேண்டிய அவசியமும் இல்லை. பனைவிதைகள் விதைத்த 45 நாட்களில் முளைக்க ஆரம்பித்து விடும். அதனால் கண்ணில் கிடைக்கும் பனை விதைகளை, விதையுங்கள். பனை செழித்து வளரட்டும்’’ 

Next Story