கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பிரசாத பானைகளில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பிரசாத பானைகளில் வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
நெல்லை,
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் பிரசாத பானைகளில் வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
வருகிற செப்டம்பர் மாதம் 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. தங்கள் வீட்டில் கிருஷ்ணர் குழந்தையாக தவழ்வதாக கருதி வழிபடுவார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்துவார்கள்.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் மற்றும் அங்குள்ள கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு முன்னதாகவே ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கலை நய ஓவியங்கள்
எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள நந்தகோபால மகாதேவ கிருஷ்ணருக்கு ஆயிரக்கணக்கான பானைகளில் வெண்ணெய் மற்றும் இனிப்பு, பலகாரங்கள் படைத்து வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டும் பானைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அவை கோசாலை மாடியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த பானைகளில் முதற்கட்டமாக பொது வான வர்ணமும், அதன் மீது அழகிய கலை நயத்துடன் கூடிய ஓவியங்களும் வரையப்படுகின்றன.
பெரிய பானைகளில் கிருஷ்ணர், ராதா, சரசுவதி, லட்சுமி மற்றும் பல்வேறு சுவாமிகளின் உருவப்படங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதில் கோவிலை சேர்ந்த ஊழியர்கள் 10 பேர் அடிப்படை பணியிலும், சிறந்த ஓவியர்கள் 8 பேர் சிறப்பு ஓவியங்களை வரையும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
10 ஆயிரம் பானைகள்
இதற்காக ராதாபுரம், பரப்பாடி, சேரன்மாதேவி கூனியூர் ஆகிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதில் 1,008 பெரிய பானைகளும், 10,008 சிறிய கலைய பானைகளும் உள்ளன.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-
கிருஷ்ணஜெயந்தி விழாவை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பக்தர்கள் உதவியுடன் பானைகளில் இனிப்பு, பலகாரங்களை படைத்து வழிபட வேண்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்திலேயே இனிப்பு, பலகாரங்கள் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணருக்கு பிடித்த முறுக்கு, சீடை, அதிரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான இனிப்பு, காரங்கள் மண்பானையில் வைத்து சுவாமிக்கு படையலிடப்படுகின்றன. இது தவிர கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய் பெரிய பானைகளில் வைக்கப்படும். மேலும் அலங்கரிக்கப்பட்ட புல்லாங்குழலும் வைக்கப்படும்.
பக்தர்களுக்கு பிரசாதம்
இந்த மண் கலையங்கள், பானைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இது கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரசாத பானை என்ற அடிப்படையில் ரேஷன் கார்டு நகல் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 ஆயிரம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு விட்டது. பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரசாத பானைகள் தயார் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story